
யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும் என்பது போல, மோடிக்கு ஒரு காலம் வந்து, சசிகலா முதல்வர் பதவியில் அமர முடியாமல் சிறைக்கு சென்றார். தினகரனும் திகார் சிறைக்கு சென்று ஜாமினில் வந்துள்ளார்.
ஆனால், குடியரசு தலைவர் தேர்தல், சசிகலாவுக்கான காலமாக இருப்பதால், அதை பயன்படுத்தி, அவர் தமது காரியத்தை சாதித்து கொள்ள திட்டமிடுகிறார் என்றும், அதன் காரணமாகவே, அதிமுகவில் மூன்றாவதாக ஒரு அணி முளைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அது சரி, குடியரசு தலைவர் தேர்தலுக்கும், மூன்றாவதாக அதிமுகவில் புதிதாக முளைத்துள்ள தினகரன் அணிக்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி எழும் அல்லவா? அதற்கு அதிமுகவினர் சிலர் சொல்லும் காரணங்களை பார்ப்போம்.
குடியரசு தலைவர் தேர்தலில், பாஜக சார்பில் மோடி நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு, அதிமுக எம்.எல்.ஏ மற்றும் எம்.பி க்களின் வாக்குகள் சிந்தாமல், சிதறாமல் அப்படியே தேவை படுகிறது.
அத்துடன், முதல்வர் எடப்பாடியும், பன்னீரும் மோடியின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அதிமுக வாக்குகள் அனைத்தும் பாஜகவிற்கு விழும் என்று மோடி கணக்கு போட்டிருந்தார். அதற்கு எடப்பாடியும், தமது ஒப்புதலை அளித்துவிட்டு வந்தார்.
ஆட்சியை காப்பாற்ற எடப்பாடி ஒப்புதல் அளித்தது தவறில்லை என்றாலும், சசிகலாவின் காரியத்தை சாதிக்க இன்னொரு பொன்னான வாய்ப்பு கிடைக்குமா?
அதனால், எடப்பாடி ஒப்புதல் கொடுத்தது, கொடுத்ததாகவே இருக்கட்டும். நாங்கள், சில எம்.எல்.ஏ, எம்.பி க்களை எங்கள் பக்கம் இழுத்து உங்களுக்கு நெருக்கடி கொடுப்பது போல் கொடுக்கிறோம்.
தினகரனை மீறி என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று எடப்பாடி சொல்லி விட்டால், அடுத்து, எம்.எல்.ஏ, எம்.பி க்கள் வாக்குகளுக்காக தினகரன் தரப்பில் பேச வேண்டிய கட்டாயம் பாஜக வுக்கு வரும்.
அப்போது, சீராய்வு மனு உள்ளிட்ட பல விவகாரங்களை நாங்கள் பேசி தீர்த்து கொள்கிறோம் என்று, முதல்வர் எடப்பாடிக்கு, சசிகலா தரப்பின் மூலம் சொல்லி அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன் காரணமாகவே எடப்பாடி ஆதரவு அமைச்சர்கள் குழுவுக்கும், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ க்களுக்கும் இடையே, கடும் மோதல் நடந்தாலும், ஆட்சி கவிழாது என்று இரு தரப்புமே உறுதியாக கூறி வருகிறது.
ஆகவே, அதிமுகவில் எடப்பாடி மற்றும் தினகரன் அணிகளுக்கு இடையே நடக்கும் மோதல் அனைத்தும், மோடியிடம் காரியம் சாதிக்க, சசிகலா நடத்தும் நாடகம் என்றே அதிமுகவினர் கூறுகின்றனர்.
பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்த பின்னர், இரண்டு மாதங்கள் பொறுமையாக இருப்பதாக கூறிய தினகரன், அடுத்த நாளே, 25 க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ க்களை தமது பக்கம் இழுத்ததில் இருந்தே தெரியவில்லையா? என்றும் அதிமுகவினர் கூறுகின்றனர்.