
சபாநாயகர் தனபால் தலைமையில் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்கூட்டம் தொடங்கியது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தமிழக அரசின் 2017-18ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக சட்டப்பேரவை கூட்டம் கடந்த மார்ச் 16ம் தேதி தொடங்கி, மார்ச் 24ம் வரை நடைபெற்றது.
வழக்கமாக பட்ஜெட் கூட்டம் முடிவுற்றதும் துறை வாரியான மானிய கோரிக்கைகள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
அப்போது, ஒவ்வொரு துறைக்கான மானிய கோரிக்கைகள் விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்பட்டு அந்த துறைக்கான செலவினங்கள் மற்றும் நிதி ஒதுக்குவதற்கான ஒப்புதல் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும்.
ஆனால் சட்டப்பேரவை கூட்டம் திடீரென மார்ச் 24ம் தேதியுடன் முடித்து வைக்கப்பதுவதாக ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்தார்.
இந்நிலையில், மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்த சட்டப்பேரவையை உடனே கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சபாநாயகர் தனபாலிடம் மனு கொடுத்தார்.
இதையடுத்து சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார்.
அதன்படி வரும் 14 ஆம் தேதி சட்டப்பேரவை கூடும் என தமிழக அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில், சட்டபேரவை எத்தனை நாட்கள் நடைபெற வேண்டும் என்பது குறித்த அலுவல் ஆய்வு கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று தொடங்கியது.
இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராசு, திமுக செயல்தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.