மக்கள் பிர்ச்சனைகளுக்கு தீர்வு காணும் திறமையோ தகுதியோ எடப்பாடி அரசுக்கு இல்லை - ராமதாஸ் பரபரப்பு அறிக்கை

First Published Jun 7, 2017, 11:35 AM IST
Highlights
Edappadi is not capable of resolving the problems of people - Ramadoss Furore report


இனிவரும் காலங்களிலும் தமிழக மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் திறமையோ, தகுதியோ எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு இல்லை.

எனவே, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்துகிறேன் என பாமக நிறுவனர் ராமதாஸ், தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டை ஆளும் கட்சியான அதிமுகவில் திடீர் திடீரென ஏற்படும் திருப்பங்களும், அடுத்தடுத்து அரங்கேற்றப்படும் நாடகங்களும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த திருப்பங்களும், நாடகங்களும் ஆளும்கட்சியினர் பயனடைவதற்கானதாக உள்ளனவே தவிர மக்களுக்கு நன்பை பயப்பதாக இல்லை. 

பழனிச்சாமி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை இவர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறவில்லை. அவ்வாறு திரும்பப் பெறுவதாக அறிவித்தால், அடுத்த நிமிடமே எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியின் ஆதரவு 97 உறுப்பினர்களாக குறைந்து அரசு கவிழ்ந்து விடும்.

ஆனாலும், நடப்பவை அனைத்தும் நாடகமாகவே தோன்றுவதால் அதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தோன்றவில்லை. ஆட்சியமைப்பதற்கு உரிமை கோருவதற்காக எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டவர்களை  தினகரன் தான் ஆளுனரிடம் அழைத்துச் சென்றார்.

ஜெயக்குமாருக்கு நிதியமைச்சர் பொறுப்பையும்,  செங்கோட்டையனுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதவியையும் தினகரன் தான் வாங்கித் தந்தார். அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்க வேண்டும் மற்ற அமைச்சர்கள் அனைவரும் வலியுறுத்திய போதும் அவரைக் காப்பாற்றியவர் தினகரன் தான்.

அதிமுக பொதுச்செயலராக  சசிகலா நியமிக்கப்பட்டது செல்லும் என்பதை நிரூபிப்பதற்காகத் தான் அதிமுக அமைச்சர்கள் பெட்டிப்பெட்டியாக ஆவணங்களை கொண்டு சென்று தில்லியிலுள்ள தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்து வருகின்றனர்.

 

இத்தகைய சூழலில் சசிகலாவுக்கும், தினகரனுக்கும் எதிராக செயல்பட எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட எந்த ஒரு அமைச்சருக்கும் துணிச்சல் இல்லை என்பதால் இவை நாடகமாக இருக்கவே வாய்ப்புகள் அதிகமாகும்.

இவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு பார்த்தாலும் கூட எடப்பாடி தலைமையிலான பினாமி அரசுக்கு பதவியில் நீடிக்க எந்த தகுதியும் இல்லை. பினாமி அரசு பதவியேற்று 112 நாட்களாகி விட்ட நிலையில், இன்று வரை சொல்லிக்கொள்ளும்படி ஒரு திட்டத்தக்கூட செயல்படுத்தவில்லை.

மருத்துவப் படிப்புக்கான  பொதுத்தேர்விலிருந்து (நீட்) தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விலக்கு பெறுவது,   வறட்சியின் கொடுமையால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியால் மாரடைப்பு ஏற்படும் உயிரிழந்த 450&க்கும் மேற்பட்ட உழவர்களின் குடும்பங்களுக்கு நீதியும், நிதி உதவியும் பெற்றுத் தருவது, நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம், மாடுகள் விற்பனைக்குத் தடை உள்ளிட்ட தமிழக மக்கள் நலன் சார்ந்த அனைத்துப் பிரச்சினைகளிலும் எடப்பாடி அரசு தோல்வியடைந்துவிட்டது.

இனிவரும் காலங்களிலும் தமிழக மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் திறமையோ, தகுதியோ எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு இல்லை.

ஒன்றுக்கும் உதவாத இந்த அரசு நீடிப்பதை விட முடிவுக்கு வருவது தான் மக்களுக்கு நன்மை பயக்கும். எனவே, மக்களின் உணர்வுகளை மதித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

click me!