
தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழல் கவலையளிப்பதாகவும், அதிமுக எம்எல்ஏக்கள் இங்கும், அங்கும் தாவிக்கொண்டிருப்பதைப் பார்த்தால், இன்னுமொரு கூவாத்தூர் உருவாகிவிடுமோ என அச்சமாக உள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக எம்எல்ஏக்களை, முதலமைச்சர் பழனிசாமி கட்டுப்படுத்தி, சிறந்த ஆட்சிப் பணியை தர வேண்டும் என வலியுறுத்தினார்.
அப்படி இல்லை என்றால் தமிழகம் விரைவில் ஒரு பொதுத் தேர்தலை சந்திக்க வேண்டி வரும் என தமிழிசை எச்சரித்துள்ளார்.அதிமுக எம்எல்ஏக்கள் தற்போது எந்த அணியில் இருக்கிறார்கள் என தொடர்ந்து குழப்பம் நீடிப்பதாக தெரிவித்தார்.
மற்றுமொரு கூவாத்தூர் உருவாகிவிடக் கூடாது என கவலை தெரிவித்த தமிழிசை, தமிழகத்தை முன்னேற்றும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
ஆனால் தற்போது இருக்கும் சூழ்நிலையைப் பார்த்தால் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு சட்டமன்றத் தேர்தல் வந்துவிடக் கூடிய நிலைமை உருவாகியுள்ளதாக தெரிவித்தார்.
உள்ளாட்சித் தேர்தலா அல்லது சட்டமன்றத் தேர்தலா என்பதை எடப்பாடி பழனிசாமிதான் முடிவு செய்ய வேண்டும் என தமிழிசை தெரிவித்தார்.
தமிழகத்தில் ஆளும் மற்றும் ஆண்ட கட்சிகள் ஊழலில் திளைத்த கட்சிகள் எனவும் குற்றம்சாட்டிய தமிழிசை, தனக்கு வரும் மிரட்டல்களுக்கு அஞ்சப்போவதில்லை என தெரிவித்தார்.