
கணவர் நடராஜனுக்கு உடல்நிலை மோசமாக இருப்பதால் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா பரோல் கேட்டு மனு அளித்துள்ளார்.
சசிகலாவின் கோரிக்கை மனு கர்நாடக சிறைத்துறை டிஜிபிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிறைத்துறை டிஜிபி ஒப்புதல் அளித்தவுடன் சசிகலா சென்னை வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா.
இவரது கணவர் நடராஜன் கடந்த 9 மாதங்களாக கடும் கல்லீரல் ரத்தக்கசிவு நோயால் பாதிக்கப்பட்டு குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது கல்லீரல் நிலைமை மோசமானதால் மாற்றுஉறுப்பு அறுவைச்சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர்.
இதையடுத்து மூளைச்சாவு காரணமாக உறுப்பு தானம் செய்வோரிடமிருந்து கல்லீரலைப் பெறுவதற்காக தமிழக மாற்று உறுப்பு தான காத்திருப்போர் பட்டியலில் நடராஜன் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதைதொடர்ந்து பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா கணவருக்கு உடல்நிலை சரியில்லை என கூறி சிறைத்துறையிடம் பரோல் கேட்டு மனு அளித்துள்ளார். சசிகலாவின் கோரிக்கை மனு சிறைத்துறை டிஜிபிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அவர் அனுமதி தந்தால் நாளை நடராஜனை பார்க்க சசிகலா சென்னை வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.