இன்று முதலே அதிமுக பொது செயலாளராகிறார் சசிகலா

First Published Dec 29, 2016, 12:43 PM IST
Highlights


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின், இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதிமுக பொது செயலாளராக ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை நியமனம் செய்வதாக, ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைதொடர்ந்து தீர்மான புத்தகம், போயஸ் கார்டனில் உள்ள சசிகலாவிடம், முதல்வர் ஒ.பி.எஸ். தலைமையில் சென்ற அமைச்சர்கள் கொடுத்தனர். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக பொதுக்குழு இன்று கூடியது. இதில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த தீர்மான புத்தகத்தை போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் உள்ள சசிகலாவை சந்தித்து, கட்சியின் பொது செயலாளராக பதவியேற்கும்படி கேட்டு கொண்டோம்.

கட்சிக்காகவும், மக்களுக்காகவும் ஜெயலலிதா ஆற்றிய பணிகள், தியாகங்கள், தமிழக மக்கள் மீது அவர் வைத்திருந்த அளவற்ற பாசம் ஆகியவற்றை குறித்து அவரிடம் நினைவு கூர்ந்து பேசினோம்.

அவரிடம், கட்சி மூத்த நிர்வாகிகள் முதல், அடிமட்ட தொண்டர்கள் வரை ஏகமனதாக, உங்களை பொது செயலாளராக ஏற்கிறோம். தயவு கூர்ந்து, இதனை ஏற்று சம்மதம் தெரிவிக்க வேண்டும். பொது செயலாளர் பதவியை ஏற்க வேண்டும் என கூறினோம்.

இதையடுத்து அவர், முழுமனதோடு, நாங்கள் கொடுத்த தீர்மான புத்தகத்தை ஏற்று கொண்டு, ‘அதிமுகவில் பொது செயலாளராக பதவியேற்று கட்சியை கட்டி காப்பேன்’ என சம்மதம் தெரிவித்தார். அவர் இன்றே அதிமுக பொது செயலாளராக பதவியேற்று கொண்டார். விரைவில் தலைமை அலுவலகத்தில் கட்சி பணியை ஆற்றுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

click me!