Sasikala meets Rajini : ரஜினியின் போயஸ் தோட்ட வீட்டில் சசிகலா !! திடீர் சந்திப்பின் காரணம் என்ன..?

By Ganesh RamachandranFirst Published Dec 7, 2021, 4:15 PM IST
Highlights

எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென்று ரஜினிகாந்தை அவர் வீட்டுக்கே சென்று சந்தித்துள்ளார் சசிகலா. போயஸ் தோட்டத்திலேயே பல ஆண்டுகள் இருந்திருந்தாலும் ரஜினி வீட்டுக்கு சசிகலா போவது இதுவே முதன் முறை.

தமிழக அரசியல் களம் பல திருப்பங்களை அடுத்தடுத்து சந்தித்து வருகிறது. குறிப்பாக அதிமுக வட்டாரங்கள் அடுத்தடுத்த பிரேக்கிங் நியூஸ் களமாக மாறியுள்ளது. எப்படியும் அதிமுகவை கைப்பற்றுவது என்று அதிரடியாக களமிறங்கியுள்ள சசிகலா, அதிமுக பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்ட லெட்டர் பேடில் தொடர்ந்து கடிதங்களை வெளியிடுகிறார். அதேபோல ஜெயலலிதா நினைவு நாளிலும் கட்சியை கைப்பற்ற தனக்கான ஆதரவாளர்களை அதிகரிக்கும் முயற்சிகளை மேற்கொண்டார். தற்போது அடுத்த அதிரடியாக சூப்ப்ர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார்.

எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென்று ரஜினிகாந்தை அவர் வீட்டுக்கே சென்று சந்தித்துள்ளார் சசிகலா. போயஸ் தோட்டத்திலேயே பல ஆண்டுகள் இருந்திருந்தாலும் ரஜினி வீட்டுக்கு சசிகலா போவது இதுவே முதன் முறை. போயஸ் தோட்டம் ஜெயலலிதா இருந்தபோது தமிழகத்தின் அதிகார மையங்களில் ஒன்றாக இருந்தது. ஆனால் அவர் மறைந்த பிறகு தற்போது மீண்டும் பரபரப்பாகியுள்ளது. சமீபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய ரஜினிகாந்தை உடல்நலம் விசாரிக்கவே சசிகலா நேரில் சென்று சந்தித்தார் என்று கூறப்பட்டாலும், இதில் வேறு காரணம் இருப்பதாக விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர். அதிமுக கட்சிக்குள் சசிகலா நினைத்த அளவுக்கு ஆதரவாளர்கள் கணிசமாக கிடைக்காத நிலையில் டெல்லி பாஜக தலைமையை, குறிப்பாக மோடி - அமித் ஷா ஆகியோரை ஈர்க்க அவர் முயன்று வருகிறார். அவர்களது பார்வையை பெறவே சசிகலா ரஜினியை சந்தித்திருப்பதாக பேசப்படுகிறது.

அதிமுக தொண்டர்களிடம் தொலைபேசியில் பேசிய ஆடியோ வெளியிடுவது, அதிமுகவில் உள்ள தனது ஆதரவாளர்களை அழைத்துப் பேசுவது என்று அமைதியான அரசியலையே சசிகலா முன்னெடுத்து வருகிறார். இனி இவையெல்லாம் எடுபடாது, களத்தில் இறங்கி பலத்தை காட்டியாகவேண்டும் என்ற மனநிலைக்கு அவர் வந்துவிட்டார். அதன் தொடக்கம் தான் அவரது தமிழக சுற்றுப்பயணம் என்றார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள். தஞ்சாவூர், மதிரை, இராமநாதபுரம் என்று பயணத்தை தொடங்கி தொண்டர்களை சந்திக்கத் தொடங்கிய சசிகலாவை தடுத்து நிறுத்தியது தொடர்மழை. மழை வெள்ளம் ஓய்ந்த பிறகு தமிழகம் முழுவதும் அவர் சூறாவளிப் பயணத்தை தொடங்குவார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தான் ஜெயலலிதா நினைவுநாளில் அதிமுக பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்ட காரசாரமான கடிதம் வெளியிட்டார். தற்போது ரஜினி சந்திப்பை வைத்து தீவிர அரசியலில் தான் இறங்கிவிட்டதாக தொண்டர்களுக்கு நம்பிக்கையூட்ட நினைக்கிறாராம் சசிகலா. ஒருபக்கம் அதிமுக தொண்டர்களை ஈர்ப்பதும், மறுபக்கம் மோடி - அமித் ஷாவின் கவனத்தை தன் பக்கம் திருப்புவதும் அவரது இலக்காக உள்ளது. அதிமுக அரசியல் உச்சகட்ட கொதிநிலைக்கு வந்துவிட்டது என்றே சொல்லலாம்..

click me!