AIADMK: அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தல் வழக்கு.. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு..!

By vinoth kumarFirst Published Dec 7, 2021, 4:12 PM IST
Highlights

அதிமுக கட்சி விதிப்படி 21 நாட்கள் அவகாசம் வழங்காமல் தேர்தல் நடத்தப்படுவதால், தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை கோரி ஓசூரைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் ஜெயச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தலுக்கு தடை கோரி தொடுக்கப்பட்ட  வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

அதிமுக கட்சி விதிப்படி 21 நாட்கள் அவகாசம் வழங்காமல் தேர்தல் நடத்தப்படுவதால், தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை கோரி ஓசூரைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் ஜெயச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், அதிமுக உட்கட்சித் தேர்தலில் போட்டியிட எவருக்கும் வாய்ப்பு வழங்கவில்லை. ஒரு கோடியே 50 லட்சம் உறுப்பினர்கள் உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் வெளியிடவில்லை. போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் செயல்படுவதாக கூறி, தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இருவரின் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்தார். 

இந்த வழக்கு உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உட்கட்சி தேர்தலில் தேர்தல் ஆணையத்துக்கு என்ன பங்கு என்றும் இதில், எந்த பங்கும் இல்லாமல் தேர்தல் ஆணையத்தை சேர்ப்பதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா இல்லையா என்பது குறித்து ஆராய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 

இதற்கு விளக்கமளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி பதிவு செய்யப்பட்ட கட்சியில் நடந்த தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய அனுமதிக்கப்படாத காரணத்தினால் ஜனநாயம் சம்மந்தப்பட்டுள்ளதாலும், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது தான். வாக்குரிமை என்பது அரசியல் சட்டத்தின் உரிமை என்று தெரிவித்தார். அரசியல் சாசனத்தில் ஜனநாயக உரிமையை மீறி செயல்படும் போது இதை எதிர்த்து வழக்கு தொடரலாம் என உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 

தேர்தலுக்கு முந்தைய நாளே போட்டியின்றி இருவரையும் தேர்ந்தெடுத்ததாக அறிவித்துள்ளனர். அடிப்படை உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதி என்ற திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இருந்து அவர்களுக்கு போட்டடியிட அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அதனால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது தான் என வாதிட்டார். இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது தானா என்பது குறித்த தீர்ப்பபை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

click me!