sasikala எடப்பாடி ஓ.பிஎஸுக்கு சசிகலா செக்..! ரஜினி சந்திப்பால் ஆடிப்போன அதிமுக தலைமை..!

By Thiraviaraj RMFirst Published Dec 7, 2021, 4:12 PM IST
Highlights

 ரஜினி இந்த விஷயத்தில் தனக்கு உதவி செய்யக்கூடும் என்கிற எதிர்பார்ப்பில் சசிகலா இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.  

ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலா இன்று சந்தித்துப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதன்முறையாக ரஜினி வீட்டிற்கு சென்றுள்ளார் சசிகலா. இது பல்வேறு வியூகங்களை கிளப்பி இருக்கிறது. 

டெல்லியில் அக்டோபர் 25-ம் தேதி நடைபெற்ற தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. சென்னை திரும்பிய ரஜினி, குடும்பத்தினருடன் தனது நடிப்பில் உருவான ‘அண்ணாத்த’ திரைப்படத்தைப் பார்த்து மகிழ்ந்தார். இந்நிலையில், அக்டோபர் 28-ம் தேதி ரஜினிக்கு மயக்கம், தலைச்சுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டதில், மூளைக்குச் செல்லும் கழுத்துப் பகுதியில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து, அடைப்பைச் சரிசெய்தனர். அவருக்கு ஏற்கெனவே சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருப்பதால், அவரது உடல்நிலையை மருத்துவக் குழுவினர் கண்காணித்து வந்தனர்.

சிகிச்சைக்குப் பின்னர், ரஜினியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அக்டோபர் 31-ம் தேதி ரஜினிகாந்த் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். தற்போது ரஜினிகாந்த் ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில் ரஜினிகாந்தை சசிகலா இன்று சந்தித்தார். போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. ரஜினியின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்த சசிகலா, தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்காக ரஜினிக்கு நேரில் வாழ்த்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

கோயில் தரிசனம், தொண்டர்களை சந்திப்பது, பொது நிகழ்ச்சிகள், கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவி வழங்குதல், அறிக்கை வெளியிடுதல் என்று சசிகலா தொடர்ந்து அரசியல் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறார். அவரை கட்சியில் சேர்ப்பது குறைத்து எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். சமீபத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை நடத்தி சசிகலாவை கட்சியில் சேர்ப்பதில்லை என்பதை உறுதி படுத்தி விட்டனர் எடப்பாடியும், ஓ.பி.எஸும். 

ஆனாலும் கட்சியில் இணைவதற்கு கடும் முயற்சிகளை எடுத்து வருகிறார் சசிகலா. இந்த நேரத்தில் ரஜினியை சந்திப்பது பேசுபொருளாகும். தன் மீது போகஸ் விழும் என நினைத்து சசிகலா ரஜினியை சந்தித்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் அமித் ஷா, மோடியின் கவனத்தை ஈர்க்க முடியும். அந்த சந்திப்பில் தனது தற்போதைய நிலவரம் குறித்து சசிகலா எடுத்துக் கூறியதாகவும், ரஜினி ஆர்வமுடன் கேட்டுக் கொண்டதாகவும், ரஜினி இந்த விஷயத்தில் தனக்கு உதவி செய்யக்கூடும் என்கிற எதிர்பார்ப்பில் சசிகலா இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. 

click me!