சசிகலா இணைப்பு..! இறங்கி வந்த பாஜக..! பிடிகொடுக்காத அதிமுக..!

By Selva KathirFirst Published Feb 19, 2021, 9:54 AM IST
Highlights

அதிமுகவில் மறுபடியும் சசிகலாவை இணைத்து தேர்தல் களத்தில் திமுகவை எதிர்கொள்வது தான் சிறப்பான வியூகமாக இருக்கும் என்பதில் இருந்து பாஜக இறங்கி வந்துள்ள நிலையில் வழக்கம் போல் அதிமுக பிடிகொடுக்காமல் இருந்து வருகிறது.

அதிமுகவில் மறுபடியும் சசிகலாவை இணைத்து தேர்தல் களத்தில் திமுகவை எதிர்கொள்வது தான் சிறப்பான வியூகமாக இருக்கும் என்பதில் இருந்து பாஜக இறங்கி வந்துள்ள நிலையில் வழக்கம் போல் அதிமுக பிடிகொடுக்காமல் இருந்து வருகிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் மட்டுமே அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு மிகவும் டஃப் கொடுத்தனர். காவிரி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் திமுக வேட்பாளர்களிடம் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் தோல்வியை தழுவினர். அதே சமயம் தென் மாவட்டங்களில் டிடிவி தினகரனின் கட்சி வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளை பெற்றனர். எனவே சட்டப்பேரவை தேர்தலில் இது போன்ற ஒரு நிலை ஏற்படக்கூடாது என்ற பாஜக கருதுகிறது.

சசிகலாவை ஒதுக்கி வைத்தால் மறுபடியும் தினகரன் தனது கட்சி வேட்பாளர்களை சட்டப்பேரவை தேர்தலில் நிறுத்துவதார். இதனால் பாஜக கூட்டணி வாக்குகள் சிதறும் என்று அந்த கட்சி கருதுகிறது. எனவே தான் சசிகலாவை மறுபடியும் அதிமுகவில் சேர்க்க பாஜக தரப்பு முயற்சி மேற்கொண்டது. ஆனால் தங்கள் கட்சி விவகாரங்களில் இனி தலையிட வேண்டாம் என்கிற ரீதியில் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஏறி அடித்தது. அத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்ற டெல்லியில் வைத்தே, சசிகலாவை அதிமுகவில் இணைக்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை என்று தடாலடியாக அறிவித்தார் எடப்பாடி.

இதன் பிறகு சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலாவால் பெரிய அளவில் ஆதரவாளர்களை கூட்ட முடியவில்லை. இதனை சுட்டிக்காட்டி இனி சசிகலா இணைப்பு என்கிற பேச்சுடன் தங்களை அணுக வேண்டாம் என்று பாஜகவிடம் திட்டவட்டமாக கூறியுள்ளது எடப்பாடி பழனிசாமி தரப்பு. ஆனாலும் தேர்தல் தொடர்பான வியூகங்களில் தங்களுக்கு சசிகலா – தினகரன் ஆதரவு தேவை என்று பாஜக கருதுகிறது. தென் மாவட்டங்களில் உள்ள சுமார் 70 முதல் 80 தொகுதிளில் அமமுக கணிசமான வாக்குகளை பெறும் என்று பாஜக நம்புகிறது. அந்த வாக்குகளை தவறவிட்டுவிடாமல் இருக்க தற்போது வேறு ஒரு முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது.

அதாவத சசிகலாவை அதிமுகவில் இணைக்கும் முயற்சியை கைவிட்டுள்ள பாஜக, தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில் தினகரனின் அமமுகவை இணைக்கலாம் என்று காய் நகர்த்தி வருகிறது. இதனைத்தான் நேற்று செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், தனியாக 234 தொகுதிகளிலும்போட்டியிட உள்ளதாக தினகரன் கூறவில்லை என்று கூறியிருந்தார்.

இதன் மூலம் தினகரனுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதை முருகன் மறைமுகமாக கூறியுள்ளார். தினகரன் கட்சியுடன் கூட்டணி வைக்கும் நிலையில் அதிமுக இல்லை என்பதை எடப்பாடி தரப்பு மறுபடியும் நெற்றிப் பொட்டில் அடித்தாற் போல் கூறிவிட்டது.

click me!