12 தொகுதிகளில் போட்டியிட்டால்தான் தனிச் சின்னம்... திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு செக்..!

By Asianet TamilFirst Published Feb 19, 2021, 9:13 AM IST
Highlights

தமிழகத்தில் தனிச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் மதிமுக, விசிக, தமாகா ஆகிய கட்சிகள் குறைந்தபட்சம் 12 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
 

ஒரு மாநிலத்தின் மொத்த தொகுதிகளில் குறைந்தபட்சம் 5 சதவீத தொகுதிகளில் போட்டியிடும் கட்சிகளுக்கு மட்டுமே தனி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி வருகிறது. ஒருவேளை கட்சிகளுக்கு தனிச்சின்னம் ஒதுக்கப்பட்டு, தேர்தலில் போட்டியிடும்போது அந்த அளவுக்கான எண்ணிக்கை குறைந்தால், வழங்கப்பட்ட பொதுச் சின்னம் ரத்து செய்யப்படும் என்று தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதன்படி தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற கட்சிகளைத் தவிர்த்து அமமுக, மநீம, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளுக்கு பொதுச்சின்னத்தை தேர்தல் ஆணையம் அறிவித்தது.மேலும் திமுக, அதிமுக கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் குறைந்தபட்சம் 5 சதவீத தொகுதிகளில் போட்டியிட்டால், அந்தக் கட்சிகள் தனிச் சின்னத்தை வைத்துக்கொள்ள முடியும் என்ற நிலையில் உள்ளன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தமாகா  பழைய சின்னமான சைக்கிள் சின்னத்தைக் கோரியது. 5 சதவீத இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் விதியால் தாமாகா 2 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டிருக்க வேண்டும். 
அக்கட்சி தஞ்சாவூர் தொகுதியில் மட்டும் போட்டியிட்டதால், தனிச் சின்னமான சைக்கிள் சின்னம் வழங்கப்படவில்லை. சுயேட்சை சின்னமான ஆட்டோ சின்னமே வழங்கப்பட்டது. தற்போது சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 5 சதவீத தொகுதிகள் என்றால், 12 தொகுதிகளில் போட்டியிடும் கட்சிகளுக்கு மட்டுமே தனிச் சின்னம் கிடைக்கும். எதிர் காலத்தில் அந்தச் சின்னத்தையும் தக்க வைத்துக்கொள்ள முடியும். எனவேதான் திமுக, அதிமுக கூட்டணியில் உள்ள மதிமுக, விசிக, தமாகா ஆகிய கட்சிகள் கட்சிகள் கூடுதல் தொகுதிகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.


தற்போதைய நிலையில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 10 தொகுதிகள், விசிகவுக்கு 6 தொகுதிகள், அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 5 தொகுதிகள் வரை வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகிவருகின்றன. ஒரு வேளை இதே அளவில் இந்தக் கட்சிகள் போட்டியிட்டால், இக்கட்சிகள் தனிச் சின்னத்தில் போட்டியிட முடியாத நிலை ஏற்படலாம்.  தேர்தல் ஆணையத்தின் விதியால், திமுக, அதிமுக கூட்டணியில் உள்ள சிறு கட்சிகளுக்கு சிக்கல்கள் காத்திருக்கின்றன.
 

click me!