தேர்தல் பிரசார மாநாட்டில் கூட்டணி கட்சிகளை மேடையேற்ற அதிமுக திட்டம்... காத்திருக்கும் தொகுதி பங்கீடு சிக்கல்.!

By Asianet TamilFirst Published Feb 19, 2021, 8:34 AM IST
Highlights

விழுப்புரத்தில் பிப். 28 அன்று அதிமுக  சார்பில் தேர்தல் பிரசார மாநாடு நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாக தொகுதி பங்கீடு முடிந்துவிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக., பாமக, தேமுதிக, தமாகா, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழலில் பாஜக - அதிமுக தொகுதி பங்கீடு தொடர்பாக திரைமறைவில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன. டெல்லியில் 21ம் தேதி அதிமுக அலுவலகம் திறக்கப்பட உள்ளது. இந்த விழாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்க உள்ளனர்.
இந்த விழாவுக்காக டெல்லி செல்லும்போது பாஜக மூத்த தலைவர்களைச் சந்தித்து தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய அதிமுக தரப்பு முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுடன் ஜெயலலிதா பிறந்த நாளான பிப். 24க்குப் பிறகு பேச்சுவார்த்தை நடத்தவும் அதிமுக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கிடையே விழுப்புரத்தில் அதிமுக சார்பில் பிப். 28 அன்று தேர்தல் பிரசார மாநாட்டை நடத்த அதிமுக முடிவு செய்துள்ளது. இதற்காக விக்கிரவாண்டியில் 100 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இந்த மாநாட்டில் அதிமுக கூட்டணி கட்சிகளையும் மேடையேற்ற அதிமுக திட்டமிட்டுள்ளது. பாஜக சார்பில் உள்துறை அமைச்சர்  அமித்ஷா பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டுக்கு முன்பாக பாஜகவுடன் பேச்சுவார்த்தை முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பாஜக இந்த மாநாட்டில் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. ஆனால், பாமக, தேமுதிக, தமாகா போன்ற கட்சிகளுடன் இந்த தேர்தல் பிரசார மாநாட்டுக்கு முன்பாக அதிமுக தொகுதி பங்கீட்டை இறுதி செய்துவிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


2019 நாடாளுமன்றத் தேர்தல் பொதுக்கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் வண்டலூரில் நடைபெற்றபோது கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடையாததால், அப்போது தேமுதிக. தமாகா ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை. அதுபோன்ற ஒரு நிலை மீண்டும் ஏற்பட்டால், அது கூட்டணிக்குள் பிரச்னை இருப்பதைக் காட்டும் என்பதால், அதற்கு முன்பாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு செய்யும் நிலையில் அதிமுக உள்ளது. வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக பேசிவந்த பாமக குழுவும் அதிமுக அமைச்சர்கள் குழுவும் கடந்த சில நாட்களாக சைலண்ட் மோடில் சென்றுவிட்டன. திருப்திகரமான சீட்டுகளை எதிர்பார்த்து தேமுதிக காத்திருக்கிறது. எனவே, தேர்தல் பிரசார மாநாட்டுக்கு முன்பாக அதிமுக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை நிறைவு செய்துவிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

click me!