நாராயணசாமிக்கு தொல்லைக்கொடுக்க வந்தவர் கிரண்பேடி. ஆட்சியைக் கவிழ்க்க வந்தவர் தமிழிசை.. கே.எஸ்.அழகிரி ஆவேசம்.!

By Asianet TamilFirst Published Feb 18, 2021, 9:29 PM IST
Highlights

நாராயணசாமி அமைச்சரவையை அனுப்புவதாகச் சொல்லி முயற்சித்த கிரன்பேடி போய்விட்டார். இப்போது தமிழிசை வந்துள்ளார். அவருக்கு என்ன நிகழ போகிறதோ தெரியவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
 

சென்னை விமான நிலையத்தில் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “புதுச்சேரியில் காங்கிரஸ் அரசை செயல்படாமல் தடுக்க கிரண்பேடியை மோடி அனுப்பினார். இப்போது ஆட்சியைக் கவிழ்க்க தமிழிசையை அனுப்பி உள்ளார். கிருஷ்ணரை கொல்ல பெண்களைத்தான் பல்வேறு உருவங்களில் அனுப்பினார்கள். ஆனால், எல்லா முயற்சிகளிலும் கிருஷ்ணர் தப்பினார். அப்படி வந்த பெண்கள்தான் தப்பிக்க முடியாமல் போனார்கள். நாராயணசாமி அமைச்சரவையை அனுப்புவதாகச் சொல்லி முயற்சித்த கிரன்பேடி போய்விட்டார்.


இப்போது தமிழிசை வந்துள்ளார். அவருக்கு என்ன நிகழ போகிறதோ தெரியவில்லை. இது ஜனநாயகத்துக்கு புறம்பான செயல் ஆகும். நான்கரை ஆண்டுகளாக காங்கிரஸ் அரசுக்கு தொல்லை கொடுத்து வந்தபோது நடவடிக்கை எடுக்காமல் இப்போது நடவடிக்கை எடுக்க என்ன காரணம்? ஓர் ஆளுநரை வெளியே அனுப்பி மற்றொருவரை அனுப்பும்போது அதற்கான காரணத்தை மக்களிடம் உள்துறை அமைச்சகம் விளக்க வேண்டாமா? அன்றைக்கே மோடி அனுப்பி இருந்தால் வரவேற்றிருக்கலாம். கிரன்பேடி செயலை வேறு வடிவத்தில் செய்ய இன்னொருவர் அனுப்பப்பட்டு உள்ளார். இதை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கும். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடம் கேட்க உள்ளோம். பாஜகவில் நடிக்க ஆட்கள் இல்லாததால் நடிகர், நடிகைகளை சேர்த்துவருகிறார்கள்” என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

click me!