தமிழக முதல்வராக ஸ்டாலின் பகல் கனவில் உள்ளார்... அது நடக்கவே நடக்காது... எடப்பாடி பழனிச்சாமி சாபம்..!

By Asianet TamilFirst Published Feb 18, 2021, 9:21 PM IST
Highlights

எப்படியாவது மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று மு.க. ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். அது ஒருபோதும் நடக்காது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தென்காசியில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “அதிமுக அரசின் சாதனைகளையும் திட்டங்களையும் தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். இளைஞர்களும், இளம்பெண்கள் பாசறையினரும் வீடுவீடாகச் சென்று பிரசாரம் செய்ய வேண்டும். அதிமுக அரசு மக்களுக்கு எதையுமே செய்யவில்லை என்று மு.க.ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்துவருகிறார். இந்த பொய் பிரசாரத்தை அதிமுகவினர் முறியடிக்க வேண்டும்.
நான் முதல்வராக பதவியேற்றபோது, என்னுடைய ஆட்சி ஒரு மாதத்தில் கவிழ்ந்துவிடும் என்று ஸ்டாலின் கூறினார். ஆனால், மக்கள் துணையோடு இந்த ஆட்சி 5-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அதிமுக ஆட்சியை கவிழ்க்க எத்தனையோ சதி செய்தார்கள். அதையெல்லாம் முறியடித்துள்ளோம். அதிமுகவை உடைக்க செய்த முயற்சிகளையும் தவிடுபொடியாக்கியுள்ளோம். ஜெயலலிதா மறைவுக்குப் பின் முதல்வரா ஸ்டானின் பகல் கனவு கண்டார். குறுக்கு வழியில் திட்டங்கள் போட்டார். அந்தத் திட்டங்கள் எல்லாம் தூள்தூளாயின. நேர்மையான வழியில் ஆட்சிக்கு வர முடியாமல் குறுக்கு வழியில் ஆட்சிக்கு வர நினைத்தால் எதிர்க்கட்சி வரிசைகூட உங்களுக்கு கிடைக்காது.

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை அதிமுக அரசு நிரூபிக்கும்போது, திமுகவினர் குழாயடிச் சண்டை போடுவதுபோல் நடந்துகொண்டார்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்குமா?  திமுகவினர் பதவியில் இருக்கும்போது மக்களை மறந்துவிடுவார்கள். தேர்தல் வரும்போதுதான் மீண்டும் மக்களை நினைப்பார்கள். எப்படியாவது மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று மு.க. ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். அது ஒருபோதும் நடக்காது. ஸ்டாலின் ஊர் ஊராகச் சென்று மனு வாங்கிக்கொண்டிருக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களை சந்தித்து வாங்கிய மனுக்கள் என்ன ஆனது?.
2006-இல் நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுப்பதாக சொன்ன திமுகவின் வாக்குறுதி என்ன ஆனது? மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பறிக்க பார்க்கிறார்கள். எப்போதும் தர்மம், நேர்மை, உண்மைதான் வெல்லும்” என்று எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
 

click me!