கழக நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து சசிகலாவை அதிமுகவில் சேர்க்கக் கூடாது என்று தமிழகம் முழுவதும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எந்த சூழ்நிலையிலையும் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை.
எந்த ஒரு சூழ்நிலையிலும் சசிகலாவை அதிமுகவில் சேர்க்கவே வாய்ப்பில்லை என அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் சசிகலா அதிமுக விவகாரம் மீண்டும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. அதிமுகவை கைப்பற்றியே தீருவோம் என்ற முழக்கத்துடன் சசிகலா தொண்டர்களை சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். ஆனால், அதிமுகவுக்கும், சசிகலாவுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சிவி.சண்முகம் திட்டவட்டமாக கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓ .பன்னீர்செல்வம், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அவர்கள் வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்றார். அதைபோல் சசிகலா அவர்களை கட்சியில் இணைப்பது தொடர்பாக தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என்றார். இது அதிமுகவில் பெரும் பேசும் பொருளாக உருவாகியுள்ளது.
இந்நிலையில், கிருஷ்ணகிரியில் அதிமுகவின் பொன்விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில், கே.பி.முனுசாமி பங்கேற்றார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- கழக நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து சசிகலாவை அதிமுகவில் சேர்க்கக் கூடாது என்று தமிழகம் முழுவதும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எந்த சூழ்நிலையிலையும் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை.
முடிந்த விஷயத்திற்கு ஊடகங்கள் கமா போடாமல் பெரிதுப்படுத்துகிறது. கட்சியில் தலையிட மாட்டேன் என்ற சசிகலா மீண்டும் தற்போது தலையிடுவது ஏற்புடையதல்ல. சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதிமுகவிற்கும் சசிகலாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஜெயலலிதா மீது உண்மையான பற்று இருந்தால் சசிகலா இனி அரசியல் பேசக்கூடாது. அவர் கட்சிக்கு தொண்டராக வரவில்லை. ஜெயலலிதாவிற்கு உதவியாளராக வந்தவர்.
ஜெயலலிதாவிடம் இருந்து பிரிந்த சசிகலா மீண்டும் ஜெயலலிதாவிடம் சேரும்போது தானோ, தனது உறவினர்களோ அரசியலில் ஈடுபட மாட்டோம் என எழுதிக்கொடுத்துவிட்டுதான் ஜெயலலிதாவுடன் இணைந்தார். இந்த இயக்கத்தை நல்ல முறையில் நடத்துங்கள் என்று வாழ்த்தினால் புரட்சி தலைவலி ஜெயலலிதாவின் உண்மையான சகோதரியாக வருவார்கள். அப்படி இல்லையென்றால் ஜெயலலிதாவுடன் அவர் வணிக ரீதியாக பழகி வந்தார் என்பதைக் காட்டுகிறது என கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.