
அம்மா உணவுகளுக்கு பணத்தை செலவு செய்வதில் சிரமம் இருக்கிறது என்றும், இந்த நிலையில் கூடுதலாக எவ்வாறு அம்மா உணவகங்களை திறக்க முடியும் என்றும் அமைச்சர் கே.என் நேரு கேள்வி எழுப்பியுள்ளார். அம்மா உணவகங்களில் பணிபுரியும் பெண்கள் யாரையும் பணியை விட்டு நீக்கவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற முதல் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதில் பல திட்டங்கள் மக்களால் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது. ஆனால் தற்போது அம்மா உணவுகளை இந்த அரசு முறையாக பராமரிப்பதில்லை என்றும், அதற்கு தேவையான அளவுக்கு நிதி வழங்குவதில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. மொத்தத்தில் அம்மா உணவகங்களுக்கு மூடு விழா நடத்த திமுக அரசு முடிவு செய்திருப்பதாக அதிமுக, மக்கள் நீதி மையம் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இதையும் படியுங்கள் : சசிகலா விவகாரத்தில் எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த பன்னீர்.. கட்சியில் சேர்ப்பது குறித்து வெளியிட்ட அதிரடி தகவல்.
இந்நிலையில், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அதிக அளவில் சிறந்த முறையில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வரும் குடியிருப்பு நலச்சங்க நிர்வாகிகளை சந்தித்து அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அப்போது அவர்கள் மத்தியில் பேசிய அவர், சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 1200 எம்.எல்.டி குடிநீர் தேவைப்படுகிறது, ஆனார் 800 எம்.எல்.டி தண்ணீர் தான் வழங்க முடிகிறது என்றார். அடுத்தாண்டுக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்படாத அளவுக்கு சென்னை ஏரிகளில் தண்ணீர் இருப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.
இதையும் படியுங்கள் : நான் தொகுதியில் மட்டும் அரசியல் செய்பவன் அல்ல.. அண்ணாமலையை ஓங்கி அடித்த அமைச்சர் சேகர் பாபு.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் பணிபுரியும் பெண்கள் அதிக அளவில் உள்ளதால், சுழற்சிமுறையில் அவர்களுக்கு பணி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் யாரையும் பணிநீக்கம் செய்யவில்லை என்றார். தமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்களுக்கு செலவு செய்வதில் சிரமம் உள்ளது என்ற அவர், இந்த நிலையில் கூடுதலாக எவ்வாறு அம்மா உணவகங்களை திறக்க முடியும் என கேள்வி எழுப்பினார். எதுவாக இருந்தாலும் முதல்வர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்றார்.