
தமிழகத்தில் அதிமுக ஆட்சி மீண்டும் அமைய உறுதுணையாக இருந்தவர் சசிகலா என்றும் அதில் எந்த மாற்று கருத்துக்கும் இடமில்லை என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
தமிழக அரசியல் பரபரப்பு உச்சகட்ட சூழ்நிலையை எட்டி உள்ளது. ஜெயலிதா மறைவுக்கு பிறகு, பல்வேறு அரசியல் பரபரப்பு நிகழ்ந்து வருகிறது.
அதிமுகவின் பொது செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, முதலமைச்சராக முயன்றார். இந்த நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பரன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனை அடுத்து, எடப்பாடி பழனிசாமியை, முதலமைச்சராக நியமனம் செய்தார் சசிகலா. அணிகளாக பிரிந்திருந்த ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., இணைப்புக்கு பிறகு, டிடிவி தினகரன் ஓரங்கட்டப்பட்டார்.
இந்த நிலையில், சசிகலாவின் கணவர் ம.நடராசன், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரைப் பார்ப்பதற்காக சசிகலா 5 நாள் பரோலில் வந்துள்ளார்.
இந்த நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரையில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு முகாம் ஒன்றை தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சி மீண்டும் அமைய உறுதுணையாக இருந்தவர் சசிகலா என்றும் அதில் எந்த மாற்று கருத்துக்கும் இடமில்லை என்றும் கூறினார்.
கருத்து வேறுபாடுகள் வருத்தங்கள் இருந்தாலும், தற்போது வெளிப்படுத்த முடியாத அனைத்தையும் அடக்கி கொண்டுள்ளேன். இன்றைய சூழலில் சசிகலா குறித்து எந்த கருத்தையும் சொல்ல முடியாமல் இருப்பதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.