
உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால்தான் டெங்கு பிரச்சனை அதிகமாக உள்ளது என்றும் காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் தமிழிசை சௌந்திரராஜன் கூறியுள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தலைமையில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தமிழிசை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், உள்ளாட்சிகளுக்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்குவதாக கூறினார். உள்ளாட்சி நிர்வாகத்தை மாநில அரசோ, அதிகாரிகளோ கொண்டு வந்துவிட முடியாது என்றும் கூறினார்.
காய்ச்சல் வந்தால், தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றார். ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை பொதுமக்கள் அணுக வேண்டும்.
டெங்கு காய்ச்சலுக்கு அரசாங்க மருத்துவமனைகளில் சரியான மருத்துவத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசாங்கமோ, தனியாரோ எந்த மருத்துவமனையாக இருந்தாலும் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும். காய்ச்சல் எதுவாக இருந்தாலும் அதற்கான பரிசோதனைகளைச் செய்து கொள்ள வேண்டும்.
அதிகாரிகளை வைத்துக் கொண்டு அனைத்தையும் நிறைவேற்ற முடியாது என்று கூறிய அவர், உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால்தான் டெங்கு பிரச்சனை அதிகமாக உள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் தா.பாண்டியன் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த தமிழிசை, பெயரைச் சொல்வதில் என்ன தவறு என்று கேள்வி எழுப்பினார். தமிழகத்தில்தான் பெயரை சொல்வது தவறாக கருதப்படுவதாகவும் கூறினார். தாமஸ் பாண்டியன் என்று சொல்வதில் என்ன தவறு உள்ளது என்றும் தமிழிசை கேள்வி எழுப்பினார்.