
பரோலில் வெளிவந்துள்ள சசிகலாவை அமைச்சர்களோ எம்.எல்.ஏக்களோ இதுவரை சந்திக்காத நிலையில், சசிகலாவிடம் சில அமைச்சர்கள் போனில் பேசியதாகக் கூறப்படுகிறது.
கணவர் நடராஜனைக் காண சிறையிலிருந்து 5 நாட்கள் பரோலில் வந்துள்ள சசிகலாவை, அவரது ஆதரவு அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் சந்திக்கலாம் என கருதப்பட்டது. ஆனால் யாரையும் சந்திக்கக்கூடாது, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என சிறை நிர்வாகம் நிபந்தனை விதித்ததால் சசிகலாவை யாராலும் சந்திக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
எனினும் இளவரசியின் மருமகனின் போனிற்கு தொடர்புகொண்டு சில அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் சசிகலாவிடம் பேசியுள்ளனர். எடப்பாடி தலைமையிலான அரசுக்கு எப்போது ஆதரவு அளிப்போம் என உறுதி அளித்ததற்காகவே அவருக்கு ஆதரவு அளித்துவருவதாகவும் ஆனால் எப்போதுமே உங்களுக்குத்தான் விசுவாசமாக இருப்போம் எனவும் சில அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் சசிகலாவிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சியில் அனைவரையும் ஒதுக்கிவிட்டு தன்னிச்சையாக தினகரன் செயல்பட்டதால்தான் அவரை ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் சசிகலாவிடம் தெரிவித்துள்ளனர். மேலும் தினகரன் தனிக்கட்சி தொடங்க இருப்பதாகவும் சசிகலாவிடம் பேசிய அமைச்சர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.