கோவை கார் வெடி விபத்து.! பொது வெளியில் கவனமுடன் கருத்து கூற வேண்டும்.! பாஜகவிற்கு சசிகலா அறிவுரை

By Ajmal KhanFirst Published Oct 26, 2022, 8:57 AM IST
Highlights

திமுக தலைமையிலான அரசு, கோவை கார் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில், நேர்மையான விசாரணைகளை மேற்கொண்டு விரைந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சசிகலா வலியுறுத்தியுள்ளார்.
 

கோவை சிலிண்டர் குண்டு வெடிப்பு

கோவை சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் தொடர்ந்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதே போல அதிமுக சார்பாக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்தநிலையில் கோவை சிலிண்டர் குண்டு வெடிப்பு தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது, திமுக தலைமையிலான ஆட்சியாளர்கள் இதை கட்டுப்படுத்த தவறுகிறார்கள் என்பதை நான் வெகுநாட்களாக எச்சரித்து வருகிறேன். தமிழகத்தில் சமீப காலமாக நடைபெறும் நிகழ்வுகள் இதனை மெய்ப்பிக்கும் வகையில் இருக்கிறது.

கோவை மாநகரில் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் வாசல் முன்பு, தீபாவளி பண்டிகைக்கு முன்தினம் அதிகாலை காரில் எரிவாயு சிலிண்டர் வெடித்து, அதில் ஒருவர் கருகி உயிரிழந்திருப்பதாக முதலில் செய்தி வந்தது. அதன்பின்னர், அதில் உயிரிழந்தவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் நாட்டு வெடிகுண்டு செய்வதற்கான மூலப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், விபத்து நடந்த இடத்தில் ஏராளமான ஆணிகள், கோலிகுண்டுகள் மற்றும் பால்ரஸ் குண்டுகள் சிதறி கிடந்ததாகவும், இது தொடர்பாக ஐந்து நபர்களை கைது செய்து இருப்பதாகவும் செய்திகள் வருகிறது. இந்த சம்பவம் அனைவருக்கும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. 

கோவை குண்டு வெடிப்பு திட்டமிட்டதுதான்.! முதல்வர் கண்டனம் சொல்லவே இல்லை - பற்ற வைக்கும் எச்.ராஜா

கவனமுடன் கருத்து கூற வேண்டும்

இது தற்செயலாக ஏற்பட்ட விபத்தா? அல்லது எதாவது திட்டமிட்ட சதிச்செயலா? என்பதை தமிழக காவல்துறை தெளிவுபடுத்திட வேண்டும். மேலும், ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு வெளிப்படைத்தன்மையோடு விசாரணை செய்து உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுத்தர வேண்டும் என்று இந்த ஆட்சியாளர்களை கேட்டுக் கொள்கிறேன். மேலும், இதுபோன்று மாநிலத்தின் பாதுகாப்பு தொடர்புடைய சம்பவங்கள் குறித்து பொதுவெளிகளில் யார் பேசினாலும் மிகவும் கவனமுடன் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தவேண்டும் ஏனென்றால், அவர்கள் தங்களது கருத்துக்களால் தொடந்து நடைபெறுகின்ற விசாரணைகளுக்கு ஏதும் இடையூறு ஏற்படுத்தி விடாமலும் பார்த்துக்கொள்ளவேண்டும். மேலும், அனைத்தையும் பொதுவெளியில் பேசிவிட்டால், அது அந்த குறிப்பிட்ட வழக்கின் விசாரணைகளையே நீர்த்துப்போக செய்து விடலாம். அதுமட்டுமல்ல நம் மாநிலத்தின் பாதுகாப்புக்கும் எதாவது ஒரு வகையில் ஊறு விளைவிப்பதாக அமைந்துவிடும். இது இத்தனை வருடங்களில் எனது அனுபவபூர்மாக நான் கற்றுக்கொண்டது. 

கோவை சிலிண்டர் வெடிப்புக்கு முன் முபின் வைத்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ..? அண்ணாமலை வெளியிட்ட ஆதாரம்

புரட்சித்தலைவி அம்மா அவர்களோடு பயணித்த காலங்களில் நாம் ஆட்சியில் இருந்தபோதும், இல்லாத நேரங்களிலும், நம்மிடம் வரும் தகவல்களை அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, நாட்டின் பாதுகாப்புக்கு எந்த விதத்திலும் குந்தகம் ஏற்படாத வகையில் மிகவும் கவனமாக கையாண்டு இருக்கிறோம். திமுக தலைமையிலான அரசு நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அளிக்கின்ற விசயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து விழிப்புடன் செயலாற்ற வேண்டும். தமிழக எல்லைகளில் எந்தவித அந்நிய சக்திகளும் ஊடுருவ இயலாத வகையில் கண்காணிப்புகளை பலப்படுத்திட வேண்டும்.

நேர்மையான விசாரணை நடத்த வேண்டும்

இது போன்ற விசயங்களில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எவ்வாறு உறுதியான முடிவுகளை எடுத்து இரும்புக்கரம் கொண்டு தமிழகத்தை பாதுகாத்தாரோ, அதே போன்று, இன்றைய ஆட்சியாளர்கள், தமிழக மக்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி, தமிழகம் அமைதி பூங்காவாக விளங்கிட தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எனவே, திமுக தலைமையிலான அரசு, கோவை கார் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில், எந்தவிதமான புற அழுத்தங்களுக்கும் இடம் அளித்திடாமல், துரிதமாக செயல்பட்டு, நேர்மையான விசாரணைகளை மேற்கொண்டு, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக சசிகலா கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்

தமிழகம் கண்டிராத தற்கொலைப்படை தாக்குதல்..? மு.க.ஸ்டாலின் பேச தயங்குவது ஏன்..? அண்ணாமலை ஆவேசம்

click me!