
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை, 15 நாட்களுக்கு ஒருமுறைதான் சந்திக்க முடியும் என சிறைத்துறை நிர்வாகம் கெடுபிடி செய்து வருவதால், மன்னார்குடி உறவுகள் தவிப்பில் உள்ளன.
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை, பெங்களூரிலேயே தங்கி, இளவரசியின் மகன், அடிக்கடி சந்தித்து வருகிறார். அது தவிர, மற்ற உறவினர்களும், கட்சி நிர்வாகிகளும் அவ்வப்போது சந்தித்து வருகின்றனர்,
மேலும், ஓசூரில் உள்ள அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி வீட்டில் இருந்து, தயாரிக்கப்படும் உணவுகள், 3 வேலையும் சசிகலாவுக்கு இன்னோவா காரில் அனுப்பப்படுவதாகவும் தகவல் வெளியானது.
இதை அடுத்து, அங்குள்ள மற்ற கைதிகளும், சசிகலாவை போல தங்களுக்கும் சலுகை காட்டப்பட வேண்டும் என்று அடம்பிடித்து வந்தனர்.
இதை அடுத்து, சசிகலாவுக்காக சிறை துறை விதிகள் மீறப்படுவதாக, ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனாலும், சிறைத்துறை அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 16-ம் தேதியில் இருந்து மார்ச் 18-ம் தேதி வரை 31 நாட்களில் 28 பார்வையாளர்கள் சசிகலாவை சந்தித்து பேசியது தொடர்பான விவரங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் பெறப்பட்டுள்ளன.
அந்த விவரங்களின் அடிப்படையில், சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர், “சிறைத்துறை விதிகளை மீறி சசிகலாவுக்கு சாதகமாக செயல்பட்ட சிறை அதிகாரிகள் மீது 15 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
தவறினால், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என அம்மாநில உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். இதனால் சிறை அதிகாரிகளும், போலீஸாரும் அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில் சசிகலாவின் உறவினர்கள் விவேக், ராஜ ராஜன், சிவகுமார், கார்த்திகேயன் மற்றும் அதிமுகவினர். சிறையில் சசிகலாவை சந்திக்க நேற்று அனுமதி கோரி உள்ளனர்.
ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த சிறை துறை அதிகாரிகள், இனி அடிக்கடி சசிகலாவை சந்திக்க அனுமதிக்க முடியாது என்றும் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே அனுமதிக்க முடியும் என்று கூறிவிட்டனர்.
அதன் காரணமாக, சசிகலாவை அடிக்கடி சந்தித்து எதையும் பேச முடியாது என்பதால், அவரது, உறவினர்களும், அதிமுகவினரும் கடும் தவிப்பில் உள்ளனர்.