
நடிகர் ரஜினிகாந்த், வரும் ஏப்ரல் 12 முதல் 17 ம் தேதி வரை தொடர்ந்து தமது ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுக்கத் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், அந்த நிகழ்ச்சியை திடீரென ரத்து செய்வதாக வாட்ஸ்-அப் மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி உள்ளார். இது ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ரஜினிகாந்த் தமது நிகழ்ச்சியை ரத்து செய்வதற்கு, பாஜக கொடுத்த நெருக்கடியே காரணம் என்று பரவலாக பேசப்படுகிறது.
நடிகர் ரஜினியை, எப்படியாவது அரசியலுக்கு கொண்டு வந்து, அவரை பாஜக வின் முதல்வர் வேட்பாளராக அறிவித்து தேர்தலை சந்திப்பது என்று பாஜக முயற்சித்து, அதற்கான பணிகளில் மும்மரமாக ஈடுபட்டுள்ளது.
ஆனால், ரஜினியோ வழக்கம்போல், பிடி கொடுக்காமல், டேக்கா கொடுத்து கொண்டே இருக்கிறார்.
ஏற்கனவே, ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று தீவிரமாக வலியுறுத்தி வரும் ரசிகர்களை, இந்த நேரத்தில் சந்தித்தால், அவர்கள் அரசியலுக்கு வரச்சொல்லி கட்டாயப்படுத்துவார்கள்.
அதற்கு, ரஜினிகாந்த் எப்படியும் மறுப்பு சொல்ல வேண்டி வரும். ஆர்.கே.நகர் இடை தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில், அப்படி ஒரு சிக்கல் தேவை இல்லை என்று பாஜக வற்புறுத்தியதால், ரஜினி, தமது நிகழ்ச்சியை ஒத்தி வைத்து விட்டார் என்று கூறப்படுகிறது.
ரஜினியின் ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் போதும், அவர் தமது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது வழக்கம். ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக அது நடைபெறவில்லை.
அதனால், ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் வலியுறுத்தியதன் பேரில், ரஜினி புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சிக்கு ஒப்புதல் அளித்தார். அதுவும் தற்போது ரத்தாகி உள்ளதால், அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.