
அதிமுகவின் இரட்டை இலை சின்னம், எடப்பாடி - பன்னீர் அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ள நிலையில், சசிகலா அணியினருக்கு தற்போது ஏமாற்றமே கிடைத்துள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவின் பொது செயலாளரான சசிகலா, முதலமைச்சராகி கோட்டைக்குப் போக முயன்றார். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றார். அவருக்குப் பிறகு, ஆர்.கே.நகர் மூலமாக டிடிவி தினகரனும் முதலமைச்சர் கனவில் மிதந்தார். இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமினில் வெளிவந்துள்ளார்.
தற்போது அதிமுக அம்மா அணியின் துணை பொது செயலாளராக தினகன் இருந்து வருகிறார். தற்போது அவர்களுக்கு அதிமுகவை கைப்பற்றுவது அவர்களின் நோக்கமாக இருந்தது.
டிடிவி தினகரனைத் தொடர்ந்து அதிமுக அம்மா அணியில் தம்மை முன்னிறுத்த சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் தீவிர முயற்சி செய்து வருவதாக தெரிகிறது. இதற்காக அவர் பல்வேறு வகை பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருகிறார் தெரிகிறது.
இந்த நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையம், எடப்பாடி-பன்னீர் அணிக்கே இரட்டை இலையை ஒதுக்கியது. இதனால், சசிகலாவின் எண்ணத்துக்கும் அவருக்கு அடுத்தபடியாக அதிமுகவில் தலைமை பொறுப்பை ஏற்க நினைத்த சசிகலாவின் குடும்பத்தினரின் ஒட்டுமொத்த கனவிற்கும் தேர்தல் ஆணையம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
தற்போது இவர்களுக்கு ஆதரவாக இருந்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை நம்பிக்கையோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் எடப்பாடி அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. கட்சியின் பெயரையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. அதிமுகவை சொந்தம் கொண்டாடலாம் என்று நினைத்திருந்த சசிகலா அணியினருக்கு தற்போது ஏமாற்றமே கிடைத்திருக்கிறது.
அதிமுக அம்மா அணி என்ற அங்கீகாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எடப்பாடி-பன்னீர் அணிக்கு அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்டுள்ளதால் சசிகலா அணிக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.