
இரட்டை இலை ஒதுக்கீடு வழக்கில் தேர்தல் ஆணையம் நியாயமாக செயல்படவில்லை எனவும் ஒருதலைபட்சமாக செயல்பட்டுள்ளதாகவும் தினகரன் ஆதரவாளர் புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, சசிகலாவிற்கு எதிராக பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியதை அடுத்து, அவரது தலைமையில் தனி அணி செயல்பட்டது.
அப்போது, சசிகலாவின் அணியில் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், தினகரன் ஆகியோர் இருந்தனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, சசிகலாவின் அணி சார்பில் தினகரனும் பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனும் போட்டியிட்டனர். அப்போது, இருதரப்பினரும் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கோரியதால், இரட்டை இலை சின்னத்தையும் கட்சியின் பெயரையும் தேர்தல் ஆணையம் முடக்கியது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, தங்கள் அணி வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கோடி பன்னீர்செல்வம் அணி கோரியபோது, 11 எம்.எல்.ஏக்கள் அந்த அணியில் இருந்தனர். அப்போது பன்னீர்செல்வம் அணியும் சசிகலா அணியும் இரட்டை இலை சின்னத்தை கோரியதால் சின்னம் முடக்கப்பட்டது.
இதையடுத்து பழனிசாமி அணியும் பன்னீர்செல்வம் அணியும் இணைந்தபிறகு தங்களுக்கு இரட்டை இலையை ஒதுக்கவேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர். இதுதொடர்பாக பழனிசாமி தரப்பு மற்றும் தினகரன் தரப்பு ஆகிய இருதரப்புகளின் வாதங்களையும் கேட்டறிந்த தேர்தல் ஆணையம் சின்னத்தை பழனிசாமி அணிக்கு ஒதுக்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், பழனிசாமி அணிக்கு 111 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது. ஆனால் தினகரன் அணிக்கு தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் உட்பட 20 எம்.எல்.ஏக்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. அதேபோல, தினகரன் அணிக்கு 6 எம்.பிக்களின் ஆதரவும் பழனிசாமி அணிக்கு 42 எம்பிக்களின் ஆதரவும் உள்ளது. அதிகமான நிர்வாகிகளின் ஆதரவின் அடிப்படையில் சின்னம் பழனிசாமி அணிக்கு ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இரட்டை இலை ஒதுக்கீடு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தினகரன் ஆதரவாளரான புகழேந்தி, தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்பட்டுள்ளது. நியாயமாக செயல்படவில்லை. இதுவே முடிவல்ல. தேர்தல் ஆணையம் மறுத்த நீதியை நீதிமன்றத்தின் வாயிலாக பெறுவோம்.
அதிகமான எம்.எல்.ஏக்கள், எம்பிக்களின் ஆதரவு இருப்பதை சுட்டிக்காட்டி சின்னத்தை பழனிசாமி அணிக்கு ஒதுக்கிய தேர்தல் ஆணையம், வெறும் 11 எம்.எல்.ஏக்களின் ஆதரவைக்கொண்ட பன்னீர்செல்வம் சின்னத்தைக் கோரியபோது, இரட்டை இலையை முடக்கியது ஏன்? எம்.எல்.ஏக்கள்., எம்பிக்களின் ஆதரவு அதிகமாக உள்ளவர்களுக்குத்தான் இரட்டை இலை என்றால், அப்போதைய தினகரன் தலைமையிலான அணியில் பெரும்பாலானோர் இருந்தபோது சின்னத்தை முடக்கியே இருக்கக்கூடாது என மிகத்தெளிவாக சரியான பாயிண்டை பிடித்தார் புகழேந்தி.
இரட்டை இலை ஒதுக்கீடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் முன்னரே, முதல்வர் நன்றி தெரிவிக்கிறார். இரண்டு மாதங்களுக்கு முன்னரே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மோடி இருக்கிறார் அவர் பார்த்துக்கொள்வார் என்று தெரிவித்தார். எனவே தீர்ப்பு வருவதற்கு முன்னரே அவர்கள் தெரிவித்த கருத்தை போலவே தான் தீர்ப்பும் வந்திருக்கிறது. எனவே இதிலிருந்தே தேர்தல் ஆணையம் ஒருதலை பட்சமாக செயல்படுகிறது என்பது தெளிவாகிறது என புகழேந்தி குற்றம்சாட்டினார்.
தேர்தல் ஆணையத்தின் முடிவு தொடர்பாக கண்டிப்பாக நீதிமன்றத்தில் பதில் சொல்லியே தீர வேண்டும் எனவும் புகழேந்தி தெரிவித்தார்.