
அதிமுக தொண்டர்களின் விருப்பத்தின்படி தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும் எங்கள் பக்கம் தர்மம், நியாயம் இருந்தது எனவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு மார்ச் 22 ஆம் தேதி இரட்டை இலை சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
ஆனால் டிடிவி தினகரன் தரப்பை ஒதுக்கிவிட்டு ஒபிஎஸ்சுடன் இணைந்தார் முதலமைச்சர் எடப்பாடி. அதற்கு அமைச்சரவையும் முழு ஒத்துழைப்பை தந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
இதையடுத்து இரட்டை இலையை மீட்க ஒபிஎஸ்சும் இபிஎஸ்சும் தீவிர முயற்சி மேற்கொண்டனர். இதனால் கூட ஆர்.கே.நகர் தேர்தல் தள்ளிக்கொண்டே போயிருக்கலாம் என தெரிகிறது.
இதைதொடர்ந்து இரட்டை இலை சின்னத்தை மதுசூதனன் தலைமையிலான எடப்பாடி பன்னீர் தரப்பினருக்கே என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், இரட்டை இலை சின்னம் மீண்டும் கிடைத்ததை சென்னையில் அதிமுக அலுவலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுக தொண்டர்களின் விருப்பத்தின்படி தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும் எங்கள் பக்கம் தர்மம், நியாயம் இருந்தது எனவும் தெரிவித்தார்.