
தேர்தல் ஆணையத்திடம் நேர்மை இல்லை எனவும் இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக பிரிந்ததால் இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது.
இதையடுத்து சசிகலா அணியும் ஒபிஎஸ் அணியும் தங்களுக்கே கட்சியும் சின்னமும் சொந்தம் என்று தேர்தல் ஆணையத்தில் பிரமான பத்திரங்கள் தாக்கல் செய்தனர். ஆனால் சின்னம் யாருக்கும் ஒதுக்கப்பட வில்லை.
அப்போது, சசிகலா தரப்பில் பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால் ஒபிஎஸ் க்கு 12 எம்.எல்.ஏக்களே ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில், அதிமுகவின் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் அணி மற்றும் தினகரன் அணி ஆகியோரிடம் ஏழு கட்டங்களாக விசாரணையை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதாவது இரட்டை இலை சின்னமும் கட்சியும் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிக்கே என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் எடப்பாடி பன்னீர் தரப்பு மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்திடம் நேர்மை இல்லை எனவும் இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் எனவும் தெரிவித்தார்.
எடப்பாடி தரப்பு நடத்திய பொதுக்குழு குறித்து 300 க்கும் மேற்பட்ட குறைகளை தங்கள் தரப்பு கூறியிருந்தும் அதைப்பற்றி எவ்வித கருத்தும் தேர்தல் ஆணையம் எடுத்துக்கொள்ளவில்லை எனவும் வெறும் 12 எம்.எல்.ஏக்களை கொண்டிருந்த பன்னீரின் கோரிக்கையை ஏற்று ஏன் சின்னத்தை முடக்க வேண்டும் எனவும் டிடிவி கேள்வி எழுப்பியுள்ளார்.
குறுக்கு விசாரணைக்கு அனுமதிக்கிறோம் என்று சொல்லிவிட்டு இப்பொது தேர்தல் ஆணையம் நிராகரித்திருப்பது சந்தேகத்தை எழுப்புவதாகவும் இதில் மத்திய அரசின் தலையீடு கண்டிப்பாக இருக்கிறது எனவும் டிடிவி குற்றம் சாட்டியுள்ளார்.