
அதிமுக சசிகலா அணி சார்பில், மாவட்ட செயலாளர்கள் கூட்டம், கடந்த 3 நாட்களாக நடந்தது. இதில் 17 மாவட்ட செயலாளர்கள் வரை வரவழைக்கப்பட்டனர்.
அவைத் தலைவர் செங்கோட்டையன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மே தின பொதுக்கூட்டம், எம்.ஜி. ஆர்., நுாற்றாண்டு விழா; இரு அணிகள் இணைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்வதற்காக, பிரமாண வாக்குமூலத்தில், கையெழுத்து பெறுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
ஏற்கனவே பெறப்பட்ட பிரமாண வாக்குமூலத்தில், சசிகலா மற்றும் தினகரன் நியமனத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிகிறது. தற்போது, முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள பழனிசாமிக்கும் முழு ஆதரவு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரமாண வாக்குமூலத்தில், முதல்வர் பெயரை சேர்த்தவர்கள், சசிகலா மற்றும் தினகரன் பெயரை நீக்கவில்லை. சசிகலா குடும்பத்தை, கட்சியை விட்டு விலக்குவதாக கூறிய, முதல்வர் மற்றும் அமைச்சர்கள், பிரமாண வாக்குமூலத்தில், அவர்கள் பெயரை நீக்காதது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில், இரு அணிகள் இடையே பேச்சு வார்த்தை துவங்க வேண்டுமானால், சசிகலா குடும்பத்தினரை கட்சியிலும், ஆட்சியிலும் இருந்து நீக்க வேண்டும் என ஓ.பி.எஸ். அணியினர் நிபந்தனை விதித்துள்ளனர்.
ஆனால், பிரமாண வாக்குமூலத்தில், சசிகலா மற்றும் தினகரனுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறி, கட்சியினரிடம் கையெழுத்து பெறுவது, பன்னீர்செல்வம் அணியினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.