
தலைவர்கள் தீவிரமாக அரசியலில் இருக்கும் வரை அவரது அடிமைகளாக கூட காட்டிக்கொள்ள தயங்காத தொண்டர்கள், அவர்கள் இறந்தாலோ, ஒதுங்கினாலோ முற்றிலும் புறக்கணிப்பது வாடிக்கையாகி விட்டது.
ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை, அவரது ஒவ்வொரு பிறந்த நாளின் போதும், அரசு மருத்துவமனையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அந்த பகுதியை சேர்ந்த அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் தங்க மோதிரம் வழங்கி தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தி வந்தனர். ஆனால், ஜெயலலிதா மறைந்த பின்னர், அவரது பிறந்த நாளான கடந்த பிப்ரவரி மாதம் 24 ம் தேதி, அமைச்சர்களோ, கட்சி நிர்வாகிகளோ, அரசு மருத்துவமனை பக்கம் தலைவைத்து கூட படுக்கவில்லை.
அதேபோல், சசிகலா பெங்களூரு சிறை செல்லும் வரை, அவரை கழகத்தின் காவல் தெய்வம் என்றெல்லாம் பேசிய அமைச்சர்களும், நிர்வாகிகளும், தற்போது அவருக்கு எதிராகவே பேசும் அளவுக்கு ஆகிவிட்டனர். அப்படி இருக்கும்போது, அவர் கொடுத்த வாக்குறுதியை எப்படி காப்பாற்றுவார்கள். அவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், சசிகலாவின் சொந்தங்களே அதை செய்ய முன்வராததுதான் கொடுமை.
அதற்கு உதாரணம்தான் பின்வரும் சம்பவம்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் வசித்த சென்னை ராமாபுரம் தோட்டத்தில், காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோர் பள்ளி இயங்கி வருகிறது. பெங்களூரு சிறை செல்வதற்கு சில நாட்கள் முன்னதாக ராமாபுரம் சென்ற சசிகலா, அங்குள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்தார்.
பின்னர், 18 லட்ச ரூபாய் மதிப்பில் அங்குள்ள காது கேளாத பிள்ளைகளுக்கு உதவும் வகையில், 245 காது கேட்கும் கருவிகளை வழங்கினார். அத்துடன் அந்த பள்ளிக்கு நன்கொடையாக 10 லட்ச ரூபாய்க்கான காசோலையும் வழங்கி உள்ளார்.
ஆனால் அந்த காசோலையில் சசிகலாவின் கையொப்பம் சரியாக பொருந்தவில்லை என்று வங்கி திருப்பி அனுப்பி விட்டது. அதனால், பணம் வந்து சேரவில்லை. அதேபோல், காது கேட்கும் கருவிகளை சப்ளை செய்த நிறுவனத்திற்கும் உரிய தொகை செலுத்தப்படவில்லை. அதனால் ஒரு கட்டத்தில், அந்த நிறுவனம், மீண்டும் கருவிகளை திரும்பப்பெற்றுக் கொண்டுள்ளது.
கருவிகளுக்கு பணம் வழங்கப்படாத தகவலை சசிகலாவோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்த பின்னரும், அவர்கள் கண்டு கொள்ளாமல் இருந்ததால், அந்த நிறுவனம் அவ்வாறு நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், பத்து லட்சத்திற்கான நன்கொடை காசோலை திரும்பி வந்ததை வெளியில் சொல்ல முடியாமல் தவித்து வருகிறது எம்.ஜி.ஆர் தோட்டத்தில் உள்ள கல்வி நிலையம்.
கடந்த காலங்களில் ஜெயலலிதாவும், சசிகலாவும் வழங்கிய பல உதவிகளை கவனத்தில் கொண்டு, அந்த பள்ளி நிர்வாகம் அமைதியாக இருப்பதாக கூறப்படுகிறது. சசிகலா சிறை சென்ற காரணத்தால், தவிர்க்க முடியாமல் இந்த நிகழ்வு ஏற்பட்டதாக வைத்துக் கொண்டாலும், சசிகலாவின் அரசியல் மற்றும் குடும்ப வாரிசுகள் இதை சரி செய்திருக்கலாமே?