
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி நடைபெறவுள்ள ஆர்.கேநகர் தொகுதி இடைத் தேர்தலின்போது கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைத்து தென்காசி மற்றும் நாங்குனேரி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றது.
நாங்குனேரி தொகுதியில் அக்கட்சியின் எர்ணாவூர் நாராயணனும் , தென்காசி தொகுதியில் சரத்குமாரும் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜெயலலிதா சமத்துவ மக்கள் கட்சிக்கு ஒரு இடம் மட்டுமே ஒதுக்கித் தந்தார். அக்கட்சி சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்ட சரத்குமார் தோல்வி அடைந்தார்.
ஆனாலும் சரத்குமார் தொடர்ந்து அதிமுகவுடன் கூட்டணியில் இருந்து வந்தார். ஜெயலலிதா மறைந்த பிறகு சென்னை ஆர்.கே,நகரில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட இடைத் தேர்தலில் அதிமுக அம்மா அணி சார்பில் போட்டியிட்ட டி.டி.வி.. தினகரன் தொப்பி சி்ன்னத்தில் போட்டியிட்ட போது சமத்துவ மக்கள் கட்சி அவரை ஆதரித்து பிரச்சாரம் செய்தது.
ஆனால் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரை அடுத்து அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போது ஆர்.கே.நகர் தொதகுதியில் மீண்டும் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் அதிமுக இரட்டை இலை சின்னத்திலும். சரத்குமார் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பிரச்சாரம் செய்த டி.டி.வி.தினகரன் சுயேட்சையாகவும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து தான் விலகுவதாக சரத்குமார் அறிவித்துள்ளார்.
8 மாத இடைவெளியில் சூழ்நிலைக்கு ஏற்ப அதிமுக நிலையை மாற்றிக்கொண்டுள்ளது. சூழலுக்கு ஏற்ப தம்மால் நிலையை மாற்றிக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ள சரத்குமார் முதலில் தொப்பி சின்னத்துக்கும் தற்போது இரட்டை இலைக்கும் பிரச்சாரம் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.