
முதல்வர் பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் அணிகள் இணைந்தபிறகாவது அதிமுக அரசு, மக்களுக்காக பணி செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது நிலை மேலும் மோசமடைந்துள்ளது.
ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதை மட்டுமே பிரதான பணியாக ஆட்சியாளர்கள் செய்து வருகின்றனர். தமிழகத்தில் இருக்கும் பிரச்னைகளை மறக்கடிக்கும் விதமாக ஜெயலலிதாவின் மரணம் குறித்த சர்ச்சையை கிளப்பிவிட்டு மற்றதை மழுங்கடித்துவிட்டனர்.
தினகரனின் எதிர்ப்பை மீறி எப்படியாவது ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பது மட்டுமே ஆட்சியாளர்களின் நோக்கம். மக்களின் நலனையும் அவர்களின் பிரச்னைகளையும் மனதில் கொண்டு அரசு செயல்படுவதாக தெரியவில்லை.
இந்நிலையில், பழனிச்சாமி தலைமையிலான அரசு நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதாக தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார். மக்களுக்கான எந்த திட்டத்தையும் இந்த அரசு செயல்படுத்தவில்லை; இந்த ஆட்சியில் எந்த தரப்பு மக்களும் மகிழ்ச்சியாக இல்லை; ஒரு ஸ்திரமற்ற ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது என நாஞ்சில் சம்பத் விமர்சித்தார்.