
உத்தரப்பிரதேசம், வாரணாசி, பனாராஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தடியடி சம்பவங்களில் சதி நடந்துள்ளது, முதல் கட்ட விசாரணையில் சமூக விரோத சக்திகளின் பங்கு இருப்பது தெரியவந்துள்ளது என முதல்வர் ஆதித்யநாத் விளக்கம் அளித்துள்ளார்.
மோதல், தடியடி,
வாரணாசியில் உள்ள பனாராஸ் இந்து பல்கலையில் பயிலும் மாணவி ஒருவரை 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் துன்புறுத்தல் செய்து தப்பியது. அதைத் தொடர்ந்து மாணவர்கள் கடந்த வார இறுதியில் பல்கலையில் போராட்டம் நடத்தினர். பல்கலையின் துணை வேந்தரை சந்திக்க மாணவர்கள் சென்றபோது, போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
நீதி விசாரணை
அப்போது கூட்டத்தினரைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தியதில், ஏராளமான மாணவர்கள், மாணவிகள், 2 பத்திரிகையாளர்கள் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்துக்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து நீதி விசாரணை நடத்தப்படும் என்று உத்தரப்பிரதேச அரசு உறுதியளித்தது.
இந்நிலையில், முதல்வர் ஆதித்யநாத் கோரக்பூரில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது-
தாக்கப்படவில்லை
பனாராஸ் பல்கலையில் மாணவர்கள் மீதும், பத்திரிகையாளர்கள் மீதும்நடத்தப்பட்ட தடியடி தொடர்பாக விசாரணை செய்த பல்கலைக குழுவினர் முதல்கட்ட அறிக்கை அளித்துள்ளனர். அதில் எந்த மாணவரும் தாக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. அதே சமயம், இந்த சம்பவத்தில் மாணவர்களை ஈடுபட்டதற்கு சமூக விரோத சக்திகளின் பங்கு இருப்பது தெரியவந்துள்ளது.
பல்கலைக்கழகத்தில் உள்ள ஒழுங்கு நடவடிக்கை குழு சரியான நேரத்துக்கு நடவடிக்கை எடுத்து மேற்கொண்டு பிரச்சினைகள் பெரிதாகாமல் இருக்குமாறு உறுதி செய்துஇருந்திருக்க வேண்டும். கலவரம் மற்றும் ஒழுங்கீனமாக நடப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்படும். மாணவர்களுடன் பேச்சு நடத்தி அடுத்து இது போல் சூழல் உருவாகாதவாறு, மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இறுதி அறிக்கை
இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க மாணவர்கள், துணைவேந்தர்கள் இடையே சிறந்த நட்புரீதியிலான தொடர்பு இருப்பது அவசியம். இறுதி அறிக்கை கிடைத்தபின், பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலுக்கு உடனடியாகநடவடிக்ைக எடுக்கப்படும்.
எதிர்க்கட்சிகள் அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும், கட்டுக்கதைகளையும் கூறியபோதிலும், மாநில அரசு சட்டம் ஒழுங்கை பராமரித்து, சிறப்பாக முன்னேற்றியுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஒழங்கு குழு தலைவர் ராஜினாமா
பனாராஸ் பல்கலையில் நடந்த தடியடி சம்பவத்துக்கு பொறுப்பு ஏற்று, பல்கலையில் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவர் பதவியில் இருந்து பேராசிரியர் ஓ.என். சிங் விலகினார். தனது ராஜினாமா கடிதத்தையும் துணை வேந்தர் கிரிஷ் சந்திர திரிபாதியிடம் ஒப்படைத்தார். இதை ஏற்றுக் கொண்ட துணை வேந்தர் , பனாராஸ் இந்து மருத்துவக்கல்லூரியின் பேராசிரியர் எம்.கே.சிங்கை ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவராக நியமித்தார்.