ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் சிறை: சமாஜ்வாதி கட்சி எம்பி, மகன், மனைவிக்கு நீதிமன்ற காவல்

By Vishnu PriyaFirst Published Feb 27, 2020, 6:43 PM IST
Highlights

உத்தரப் பிரதேச மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலின்போது வேட்புமனு தாக்கலின்போது போலி பிறப்பு சான்றிதழ் அளித்த குற்றச்சாட்டு தொடா்பான வழக்கில் இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.
 

ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் சிறை: சமாஜ்வாதி கட்சி எம்பி, மகன், மனைவிக்கு நீதிமன்ற காவல்

உத்தரப்பிரதேசம் சமாஜ்வாதி எம்.பி. ஆஸம் கான், அவரது மனைவியும், எம்.பி.யுமான தஸீன் பாத்திமா, அவரது மகனும், எம்எல்ஏவுமான அப்துல்லா ஆஸம் ஆகியோரை மார்ச்2-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க ராம்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலின்போது வேட்புமனு தாக்கலின்போது போலி பிறப்பு சான்றிதழ் அளித்த குற்றச்சாட்டு தொடா்பான வழக்கில் இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 2017-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் ராம்பூா் மாவட்டத்தின் சூவா் தொகுதியில் சமாஜவாதி கட்சி சார்பில் அப்துல்லா ஆஸம் போட்டியிட்டு வெற்றி பெற்றார்., வேட்புமனு தாக்கல் செய்தபோது, பிரமாணப் பத்திரத்தில் பிறந்த தேதி குறித்து தவறான தகவலை அளித்ததாக அப்துல்லா ஆஸம் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

போலி சான்றிதழை அளித்து தோ்தலில் வெற்றி பெற்றதாக கூறி, அப்துல்லா ஆஸமின் தோ்தல் வெற்றி செல்லாது என அறிவித்து அலாகாபாத் உயா்நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் உத்தரவிட்டது. இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் அப்துல்லா ஆஸம் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் முன்ஜாமீன் கோரி ஆஸம் கான் உள்ளிட்டோர் தாக்கல் செய்ய மனுவை ராம்பூா் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், அவா்களுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத வகையில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதையடுத்து, ஆஸம் கான், அவரது மனைவி தஸீன் பாத்திமா, மகன் அப்துல்லா ஆஸம் ஆகிய மூவரும் ராம்பூா் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனா். அப்போது, அவா்கள் மூன்று பேரையும் வரும் மார்ச்2ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

click me!