இந்தியாவுக்கு S-400 கொடுக்கும் ரஷ்யா.. தலையில் அடித்து கதறும் அமெரிக்கா.. பொருளாதார தடை விதிப்பாரா பிடன்.

By Ezhilarasan BabuFirst Published Jan 29, 2022, 4:14 PM IST
Highlights

தற்காப்புக்காகவே இந்த ஏவுகணை அமைப்பை வாங்குவதாக ஏற்கனவே இந்தியா அறிவித்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு எல்லைகள் மற்றும் வான் பரப்பு மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும், பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு பதிலடி கொடுக்க இந்தியா இதை வாங்கியுள்ளது.

வான் பாதுகாப்பு அமைப்பு  எஸ்-400 ஒப்பந்தத்திற்கு, அமெரிக்கா மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால் இந்தியா மீதான பொருளாதாரத் தடைகள் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், ஆனால் அது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது இந்தியாவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நிலவி வரும் மோதலில் அமெரிக்கா நேரடியாக தலையிட்டு வருகிறது. உக்ரைனுக்கு ஆயுத உதவியை வழங்குவதுடன் ரஷ்யாவின் வர்த்தகத்தை பாதிக்கும் வகையிலான அச்சுறுத்தல்களையும் அமெரிக்கா முன்னெடுத்து வருகிறது. ரஷ்யா உலகின் முக்கிய ஆயுத சப்ளையராக உள்ளது. எனவே அமெரிக்கா அதன் வணிகத்தை முடக்குவதற்கான பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறது. அது இந்தியாவையும் பாதிக்கக்கூடும் என்பதால் தற்போது இந்தியாவின் கவலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியா தனது எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் தனது ராணுவ பலத்தை அதிகரிப்பதற்கும் அதிக அளவிலான நவீன போர் தளவாடங்களை இறக்குமதி செய்து வருகிறது. அந்தவகையில் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்து ரஷ்யாவிலிருந்து வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. ரஷ்யா தனது வலிமையான வான் பாதுகாப்பு அமைப்பான எஸ்-400 இந்தியாவுக்கு வழங்கிவருகிறது.

ஆனால் வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியாவிற்கு கொடுத்து தெற்காசியாவின் அமைதியை ரஷ்யா சீர்குலைக்க முயற்சிப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. இந்த ஏவுகணை அமைப்பை வாங்கியபிறகு (CATSA)அமெரிக்கா எதிரி நாடுகள் மீதான தடைகள் சட்டம் பாய்ந்துள்ளது. தற்போது இந்தியா மீதும் பொருளாதார தடைகள் விதிக்கப்படலாம் என்றும், ஆனால் இதுகுறித்து நாங்கள் இந்தியாவுடன் தொடர்ந்து பேசி வருகிறோம் என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை கூறியுள்ளது. எஸ்-400 உலகின் மிகச்சிறந்த வான் பாதுகாப்பு ஏவுகணை தடுப்பு அமைப்பாகக் கருதப்படுகிறது. இதற்காக ரஷ்யாவுடன் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில் இந்தியாவிற்கான எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு டெலிவரி தொடங்கியுள்ளது. உலகின் அதி நவீன வான் பாதுகாப்பு அமைப்பாக கருதப்படும் எஸ்-400 இந்தியாவில் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் என்றும், இந்திய எல்லையில் எந்த ஏவுகணையும் இனி ஊடுருவ முடியாது என்றும் கூறப்படுகிறது. இந்த அமைப்பு எதிரிகளின் ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் போன்றவற்றை முறியடிக்கும் வல்லமை கொண்டது ஆகும். எனவே கடந்த 2018-ஆம் ஆண்டில் முதல் 5 யூனிட்டுகளுக்கு இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தியா-ரஷ்யா எஸ்-400 ஒப்பந்தத்திற்கு தொடக்கத்திலிருந்தே அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பிடன் ஜனாதிபதியானதற்கு பிறகு இந்தியா எஸ்-400 வாங்குவதை எதிர்த்தார். இப்போது உக்ரைன் பிரச்சினை எழுந்துள்ள நிலையில் மீண்டும் இந்த கொள்முதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  அமெரிக்க பாதுகாப்பு விதிமுறைகளை மீறி ஆயுதங்களை ரஷ்யாவிடமிருந்து கொள்முதல் செய்யும் பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. அந்தவகையில் இந்தியாவிற்கும் அது பொருளாதார தடை விதிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுவரை அந்த தடை குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. இந்நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸி, கடந்த வெள்ளிக்கிழமை கூறியதாவது:- இந்தியா சுதந்திரமான வெளியுறவு மற்றும் ராணுவ கொள்முதல் கொள்கையைக் கொண்டுள்ளது. இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் ஒரு சிறந்த நட்புறவு இருந்து வருகிறது. அதேநேரத்தில் அமெரிக்காவுடனும் இந்தியா தோழமை பாராட்டி வருகிறது என தெரிவித்துள்ளார்.

பொருளாதார தடைகள் மூலம் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் அமெரிக்காவின் வியூகம் பலிக்குமா..?

ஒரு வேளை அமெரிக்கா இந்தியாவின் மீது பொருளாதார தடை விதிக்கும் பட்சத்தில் அது எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து வெளியுறவு துறை நிபுணரான  கன்வால் சிபல் கூறியிருப்பதாவது, அமெரிக்கா தற்போது சீனா மற்றும்  ரஷ்யாவின் சவால்களை எதிர்கொள்கிறது, இந்நிலையில் இந்தியா போன்ற நட்பு நாடுகளுடனான உறவை அவர்கள் தொடர்ந்து மேம்படுத்த வேண்டும், இதுபோன்ற நிலையில் இந்தியா போன்ற வலுவான நண்பர்கள் அமெரிக்காவுக்கு தேவை, ஆனால் தடைகள் எதிர்மறையான தாக்கத்தையே அந்நாட்டிற்கு ஏற்படுத்தும்.

ஏவுகணை விவகாரங்களில் இந்தியா மீது அமெரிக்கா உண்மையிலேயே பொருளாதார தடை விதிக்க முடியுமா..? 

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவை சுற்றி வளைக்க இந்தியா மீதான பொருளாதார தடைகளை அமெரிக்கா விதிக்க முயற்சித்து வருகிறது. 2017 ஆம் ஆண்டிலும் அமெரிக்கா இதைச் செய்தது, ஆனால் இப்போது ஏவுகணை அமைப்புகள் இந்தியாவிற்கு வந்துள்ளன. இப்போது உக்ரைன் விவகாரம் வெடித்துள்ளது. எனவே தடை விதிப்பது அவர்களுக்கு சுலபமாகவே இருக்கும்.

இந்தியாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்...?  தற்காப்புக்காகவே இந்த ஏவுகணை அமைப்பை வாங்குவதாக ஏற்கனவே இந்தியா அறிவித்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு எல்லைகள் மற்றும் வான் பரப்பு மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும், பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு பதிலடி கொடுக்க இந்தியா இதை வாங்கியுள்ளது. இந்தியா இதிலிருந்து ஒருபோதும் பின்வாங்காது. ஏற்கனவே ரஷ்யா, ஈரான், வடகொரியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. எஸ்-400 ரக விமானத்தை வாங்கியதால் துருக்கி மீது பொருளாதார தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரஷ்யாவின் ராணுவ பொருட்களை வாங்கியதால் ஈரான், வட  கொரியாவுக்கு தடைவிதித்துள்ளது. அமெரிக்கா பொருளாதாரத் தடை வைத்திருப்பதன் மூலம் தடைசெய்யப்பட்ட நாடுகள் அமெரிக்க நிதி நிறுவனங்களில் இருந்து 75 கோடிக்கு மேல் கடன் வாங்க முடியாது, அமெரிக்கவுடனான  ஏற்றுமதி-இறக்குமதி போன்றவற்றில் கடுமையான கட்டுப்பாடுகளை சந்திக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!