
சென்னை காவல்துறையின் முழு விபரங்கள் மற்றும் செயல்பாடுகள் அடங்கிய பிரத்தியேக அதிகாரபூர்வ வலைதளத்தை உருவாக சென்னை காவல்துறைக்கு தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை காவல்துறையின் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகள், போக்குவரத்து மாற்றங்கள் உள்ளிட்டவைகளை பொதுமக்கள் எளிதில் அறியும் வண்ணம் வழிவகை செய்யக்கோரி நடராஜன் என்பவர் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் முறையிட்டிருந்தார். இவ்விவகாரம் தொடர்பாக நாகராஜன் ஆணையத்தில் அளித்த மனுவில் நந்தனம் சேமியர்ஸ் சாலை, செயின்ட் மேரிஸ் சாலைகளில் உள்ள ஒருவழிப்பாதை மாற்றம் மற்றும் தடையில்லா இடதுபுறம் திரும்புதல் போன்ற பல்வேறு போக்குவரத்து மாற்றங்களை மக்கள் உடனுக்குடன் அறிய வழிவகை செய்யக்கோரியிருந்தார்.
மேலும், சென்னை காவல்துறை சார்ந்த முழு விபரங்கள், எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்து மாற்றங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் அதிகாரபூர்வ வலைதளம் இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் சென்னை காவல்துறைக்கென பிரத்தியேகமாக அதிகாரபூர்வ வலைதளத்தை உருவாக்க தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக தற்போதுள்ள தமிழக காவல்துறையின் ஒரே ஒரு வலைதளமும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் பிரிவு 4-ன் கீழ் செயல்படவில்லை என உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் போன்ற மாநில காவல்துறை வலைதளத்தைத் தாண்டி மும்பை மற்றும் கொல்கத்தா காவல்துறைக்கென பிரத்தியேக அதிகாரபூர்வ வலைதளம் இருக்கும்பட்சத்தில் சென்னை காவல்துறைக்கென முழு விபரங்கள் அடங்கிய பிரத்தியேக அதிகாரபூர்வ வலைதளம் இல்லை என சுட்டிக்காட்டியுள்ள தமிழ்நாடு தகவல் ஆணையம், சென்னை மாநகராட்சிக்கு இருக்கும் அதிகாரபூர்வ வலைதளம் போல பொதுத்துறையாக செயல்படும் சென்னை காவல்துறைக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 3 மற்றும் 4-ல் சொல்லப்பட்டுள்ள படி பிரத்தியேக அதிகாரபூர்வ வலைதளத்தை காலதாமதமின்றி உருவாக்க சென்னை காவல்துறைக்கு தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி குடிமக்களுக்கு உள்ள உரிமையின்பால் உருவாக்கப்படும் பிரத்தியேக அதிகாரபூர்வ வலைதளத்தில் சென்னை காவல்துறையின் அதிகாரத்தின் கீழ் வரும் காவல் நிலையங்கள் மற்றும் பொறுப்பிலுள்ள அதிகாதிகள் குறித்த முழு விபரம், மின்னஞ்சல் முகவரி, காவல் நிலையங்களின் இருப்பிடம் குறித்த மேப், போக்குவரத்து காவல் மூலம் செய்யப்படும் போக்குவரத்து மாற்றங்கள் குறித்த விபரம், போக்குவரத்து நெரிசலை அதிகம் உள்ள சாலைகளில் அதைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பான விபரம் உள்ளிட்டவை அடங்கியிருக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு தகவல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாடு தகவல் ஆணையம் மூலம் அளிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவின் பிரதிகள் ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையரகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.