தனித்து களமிறங்கும் 5 கட்சிகள்.. அதிமுக திமுகவுக்கு நேரடி போட்டி.. வெற்றிவாகை சூடப்போவது யார்.??

By Ezhilarasan BabuFirst Published Jan 29, 2022, 2:21 PM IST
Highlights

நாம் தமிழர் கட்சியை வழக்கம்போல தனித்தே தேர்தலை சந்திப்பது என அறிவித்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் 30 லட்சம் வாக்குகளைப் பெற்று 6 சதவீத வாக்குகளுடன் தமிழகத்தின் 3வது பெரிய கட்சியாக நாம் தமிழர் கட்சியை பரிணமித்துள்ளது. தனித்துப் போட்டியிடுவதே தனக்கான பலம் என்பதில் அக்காட்சி உற்தியாக உள்ளதால், எதிர்வரும் தேர்தலில் தனித்து களம் காண உள்ளது.

நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் திமுக தலைமையில் ஒரு கூட்டணி, அதிமுக தலைமையில் மற்றொரு கூட்டணியும் களம் காணும் நிலையில் பாமக, தேமுதிக, நாம் தமிழர், மநீம, அமுக என ஐந்து கட்சிகள் தனித்து போட்டியிட உள்ளன. இதில் சாதக பாதகம் யாருக்கு என்பதை காட்டிலும் எந்தக் கட்சிக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதை இந்தத் தேர்தல் மூலம் ஒரளவுக்கு நிருபனமாகும் என கூறப்படுகிறது. தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490  பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு  மனு தாக்கல் தொடங்கி நடைபெற்றும் வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் திமுக, நாம் தமிழர் கட்சி,  மக்கள் நீதி மையம், அமமுக + தேமுதிக என 5 முனை போட்டி நிலவியது. ஆனால் அதற்கடுத்து நடந்த ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாமக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது. அதாவது

ஊரக உள்ளாட்சி தேர்தலில் மீதமிருந்த 9 மாவட்டங்கள் பாமகவுக்கு சாதகமான மாவட்டங்கள் என்பதால் தனித்துப் போட்டியிட்டு அதிக அளவில் வெற்றியை அறுவடை செய்ய முயற்சித்தது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அக்கட்சியால் வெற்றிபெற முடியவில்லை. ஆனாலும் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாமக அன்புமணியை மீண்டும் முதல்வர் வேட்பாளராக களமிறக்க திட்டமிட்டு வருகிறது. அதன் காரணமாக இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் தனித்துப் போட்டியிடுவது என அக்கட்சி முடிவெடுத்துள்ளது. இதனால் வட மாவட்டங்களில் செல்வாக்குடன் திகழும் பாமக உள்ளாட்சி மன்ற தேர்தலை போலவே துணிச்சலுடன் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலையும் தனித்து சந்திப்பது என முடிவெடுத்துள்ளது. 

இதேபோல் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில்  நீண்ட இழுபறிக்குப் பின்னர் இடம்பெற்ற தேமுதிக, தங்கள் கட்சிக்கு உரிய அங்கிகாரம் இல்லை என கூறி கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன் கூட்டணியில் இருந்து விலகியது. பின்னர் அவசர கதியில் அமமுக தலைமையிலான கூட்டணியில் களமிறங்கியது. அதில் தேமுதிகவுக்கு 60 இடங்கள் ஒதுக்கப்பட்டன, ஆனால் அதில் 1 இடத்தைக் கூட தேமுதிகவால் வெற்றி பெற முடியவில்லை. பின்னர் அமமுக கூட்டணியில் இருந்தும் விலகிய தேமுதிக ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. அதேபோல நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையும் தனித்து சந்திக்க முடிவெடுத்துள்ளது.  இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இனி எந்த கட்சியுடனும் கூட்டணி வைப்பதில் பலன் இல்லை, தேமுதிக தனித்துப் போட்டியிட்டு மக்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்க்க வேண்டும், அந்த வகையில் நமது பணிகள் அமைய வேண்டும், இனி கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை, கூட்டணி என்று ஒன்று அமைந்தால் அது தேமுதிக தலைமையில் இனி அமையும் என பிரேமலதா நிர்வாகிகள் முன் கூறியுள்ளார். நிச்சயம் நமக்கு எதிர்காலம் உண்டு, நம்பிக்கையோடு மக்களை சந்தியுங்கள் என்று அவர் கட்சியினரை ஊக்கப்படுத்தி வருவதாகவும் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 

ஆக, வழக்கம்போல எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலை அதிமுக-பாஜக இணைந்து சந்திக்க உள்ளன. முன்னதாக இக் கூட்டணிக்கு வடமாவட்டங்களில் வாக்கு வங்கியாக இருந்த பாமக, தேமுதிக இன்றி அதிமுக-பாஜக தேர்தலை சந்திக்க இருப்பது கூட்டணிக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது. இதே நேரத்தில் திமுக தலைமையிலான கூட்டணி என்பது நங்கூரம் பாய்ச்சியது போல வலுவான நிலையில் உள்ளது.  ஆளும் கட்சி என்ற அந்தஸ்தில் உள்ள திமுக கொடுக்கும் இடங்களைப் பெற்றுக் கொள்ளும் அளவிற்கு கூட்டணி கட்சித் தலைவர்களிடம் ஒத்துழைப்பு மனநிலையை மேலேங்கி உள்ளது. இது திமுக கூட்டணியை கூடுதல் பலமாக உள்ளது. அதிமுக பாமக, தேமுதிக என்ற ஒரு முக்கிய தோழமைகளை இழந்துள்ள நிலையில், திமுக அதே கூட்டணி பலத்துடன் தேர்தலை எதிர்கொள்வதால் திமுகவுக்கு சாதகமான சூழலே நிலுவுகிறது எனலாம். 

இதேபோல் நாம் தமிழர் கட்சியை வழக்கம்போல தனித்தே தேர்தலை சந்திப்பது என அறிவித்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் 30 லட்சம் வாக்குகளைப் பெற்று 6 சதவீத வாக்குகளுடன் தமிழகத்தின் 3வது பெரிய கட்சியாக நாம் தமிழர் கட்சியை பரிணமித்துள்ளது. தனித்துப் போட்டியிடுவதே தனக்கான பலம் என்பதில் அக்காட்சி உற்தியாக உள்ளதால், எதிர்வரும் தேர்தலில் தனித்து களம் காண உள்ளது. இதேபோல் மக்கள் நீதி மையம் கடந்த சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது, கிட்டத்தட்ட 4 சதவீத வாக்குகளுடன் அக்காட்சி தனக்கான இடத்தை தக்க வைத்திருந்தது. ஆனால் ஆரம்பத்தில் அக்கட்சி பெற்ற வாக்கு எண்ணிக்கையை விட கடந்த சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி பெற்ற வாக்கு எண்ணிக்கை குறைவே, அதே நேரத்தில்  அக்காட்சி நகர்ப்புறங்களிலேயே அதிக வாக்குகளை பெற்றுள்ளது. 3.43  சதவீத வாக்குகள் நகர்ப்புறங்களில் மக்கள் நீதி மையம் கட்சி கிடைத்தது. இதனால் ஊரக உள்ளாட்சி தேர்தலை போன்றே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையும் அக்கட்சி தனித்தே சந்திக்கவுள்ளது.

இதேபோல டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது என முடிவெடுத்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள டிடிவி தினகரன், வெற்றிபெறும் நம்பிக்கையுடன் களம் இறங்கியுள்ளோம், நிச்சயம் இந்த முறை அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என கூறியுள்ளார். மக்கள் நீதி மையம் நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளை தவிர கூட்டணியில் மட்டுமே களம் கண்டு வந்த தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இந்த முறை தனித்து போட்டி என அறிவித்துள்ளன. இதனால் பல்முனை போட்டி என்ற நிலை இருந்தாலும், இந்தத் தேர்தலிலும் திமுக -அதிமுக கூட்டணிக்கு இடையேதான் நேரடி போட்டி என்ற நிலை உள்ளது. அதிலும் கட்டுக்கோப்பான கூட்டணி பலத்துடன் திமுக களத்தில் இருப்பதால் இந்தத் தேர்தலிலும் திமுக கூட்டணிக்கே அதிக வெற்றி வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 
 

click me!