கொரோனா பணி செய்யவிடாமல் தேர்தல் நடத்தை விதிகள் தடுக்குது... மனம் புழுங்கும் விஜயபாஸ்கர்..!

By Asianet TamilFirst Published Apr 16, 2021, 9:00 PM IST
Highlights

இந்தக் கடினமான சூழ்நிலையில் களத்தில் இறங்கி பணி செய்ய வேண்டும். ஆனால், இதற்கு தேர்தல் நடத்தை விதிகள் முட்டுக்கட்டையாக உள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமெடுத்துள்ள நிலையில் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். “தற்போது தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்துவிட்டது. ஆனால், தேர்தல் நன்னடத்தை விதிகள் இன்னும் அமலில் உள்ளன. தற்போது நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. ஒரே நாளில் 2 லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். இந்த இக்கட்டான நிலையில் சுகாதாரத் துறைக்கு தேவையான ஆலோசனை, அறிவுரைகளை அமைச்சர் அருகில் இருந்து வழங்க வேண்டும். இதனால், பணிகள் இன்னும் வேகமாக நடைபெறும். பணியாளர்கள் உற்சாகமாக செயல்படுவார்கள்.


ஆனால், கொரோனா தொடர்பாக அமைச்சர் கூட்டம் மட்டும் நடத்தலாம் என்று தேர்தல் ஆணையம் கூறிவிட்டது. இந்த சூழ்நிலையில் களத்தில் இறங்கி பணி செய்ய வேண்டும். ஆனால், இதற்கு தேர்தல் நடத்தை விதிகள் முட்டுக்கட்டையாக உள்ளது. தேர்தல் விதிமுறையால் கைகள் கட்டப்பட்டுள்ளன. எனவே முழுமையாக செயல்பட முடியவில்லை. தொற்று வேகமாக பரவுகிற காலத்தில் மருத்துவர்கள், நர்சுகளின் பங்கு முக்கியமானது. அவர்களை சந்தித்து ஊக்கப்படுத்துவதும் மிகவும் அவசியமாகும். அதுபோன்ற செயல்களில் தற்போது ஈடுபட முடியாமல் இருப்பது எனக்கு வேதனை அளிக்கிறது. 
இந்தக் கடினமான தருணத்தில் கொள்கை முடிவு எடுக்க தேவை இல்லை என்றாலும், சுகாதார பணியாளர்களோடும் மக்களோடும் இணைந்து அமைச்சர் செயல்பட வேண்டும். அதற்கு தேர்தல் விதிமுறைகளை காரணம் காட்டி பணிகள் நடைபெறாமல் இருப்பது ஏற்புடையதல்ல.” என்று விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

click me!