
அரசியலுக்கு வருவேன் என கூறிய நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்த மூத்த அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார்.
அந்த வகையில் நேற்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார் ரஜினி. கோபாலபுரம் வந்த ரஜினி காந்த்தை விட்டு வாசலுக்கு வந்து வரவேற்றார் திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.
திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த பின் செய்தியார்களிடம் பேசிய ரஜினிகாந்த், கருணாநிதிக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து உடல்நலம் குறித்து விசாரித்தேன் எனவும் தனது அரசியல் பிரவேசம் குறித்து தெரிவித்து கருணாநிதியிடம் ஆசி பெற்றேன் என்றும் கூறினார்.
தனது அரசியல் என்ட்ரி குறித்த அறிவிப்புக்கு பின் ரஜினிகாந்த் சந்திக்கும் முதல் தலைவர் கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மூத்த அரசியல் தலைவர்கள் லிஸ்டில் ரஜினியின் பட்டியலில் முக்கிய இடம் பிடித்தவர் பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன்.
இவரின் பிறந்த நாள் அன்று நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கக்கூடிய அளவுக்கு நெருக்கமானவரும் பாசமானவரும் என கூறலாம்.
எனவே அடுத்ததாக ஆர்.எம்.வீரப்பனை ரஜினி சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிக்கு மிகப்பெரிய திருப்பத்தை கொடுத்த பாட்ஷா படம் வெளியாகி வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. அப்போது ஜெயலலிதா ஆட்சியில் தமிழகத்தில் குண்டு வெடிப்புகள் அடிக்கடி நிகழ்ந்த வண்ணம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பாட்ஷா பட வெள்ளி விழா நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனும் கலந்து கொண்டார்.
அவர் இருக்கும்போதே ஆளும் ஆட்சிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ரஜினி அரசியல் பேசினார். இதை ஆர்.எம்.வீரப்பன் பெரிதாக கண்டு கொல்லவில்லை.
ஆனால் ரஜினியின் பேச்சு ஜெயலலிதாவிற்கு கோபத்தை ஏற்படுத்தியதாகவும் இதுகுறித்து அவர் தன்னிடம் விசாரித்ததாகவும் வீரப்பனே குறிப்பிட்டுந்தார்.
இதையடுத்து சில நாட்களில் அவரின் அமைச்சர் பதவியும் பிடுங்கப்பட்டது. மேலும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனால், 1995-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி ‘எம்.ஜி.ஆர் கழகம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்தார். ஒருவழியாக ரஜினியின் பேச்சு, ஆர்.எம்.வீரப்பனின் பதவியைப் பறித்துவிட்டது.
இந்நிலையில், கருணாநிதியை அடுத்து ஆர்.எம்.வீரப்பனை ரஜினி சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.