
தொழில் விஷயமாக, வெளிநாடு செல்வதற்கு அனுமதி கேட்டு கார்த்தி சிதம்பரம் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் வரும் 11 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார்.
ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீட்டை அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கார்த்தி சிதம்பரம் சட்டவிரோதமாகப் பெற்றுத் தந்தார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, தனது மகளை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்க்க டிசம்பர் 2-ஆம் தேதி பிரிட்டன் செல்ல வேண்டுமென்று கார்த்தி அனுமதி கோரினார். ஆனால், இதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று சிபிஐ தரப்பு வலியுறுத்தி வருகிறது
ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், ஐ.என்.எக்ஸ். மீடியா, அதன் இயக்குனர்கள் பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜி ஆகியோர் மீது சி.பி.ஐ. அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
கார்த்தி சிதம்பரம், வழக்கு விசாரணையில் ஆஜராகாததால், கண்காணிக்கப்படும் நபராக மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, கார்த்தி சிதம்பரம், வெளிநாடு சென்றுவர அனுமதி கேட்டு உச்சநீதிமன்றத்திடம் அனுமதி பெற்றார். இந்த நிலையில், வரும் 11 ஆம் தேதி, கார்த்தி சிதம்பரம் ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
மீண்டும் வெளிநாடு சென்று வர அனுமதி கேட்டு, கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். தொழில் விஷயமாக வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார். வரும் 10 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை வெளிநாடு பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். கார்த்தி சிதம்பரம் மனு மீதான விசாரணை வரும் 8 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.