தினகரன் வரும்போது அசந்துகூட எழுந்துடாதீங்க.. எம்.எல்.ஏக்களை அலர்ட் செய்த ஓபிஎஸ்-இபிஎஸ்!!

First Published Jan 4, 2018, 11:47 AM IST
Highlights
ops and eps advice to admk MLAs


வரும் 8ம் தேதி தமிழக சட்டசபை கூட்டம் தொடங்க உள்ளது. ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற தினகரனும் முதன்முறையாக சட்டப்பேரவைக்குள் நுழைய உள்ளதால், பழனிசாமி அரசுக்கு அழுத்தம் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஓகி புயல் பாதிப்பு, வெள்ள பாதிப்பு, தேசிய மருத்துவ ஆணையம் உள்ளிட்ட பல விவகாரங்களை எதிர்க்கட்சியான திமுக எழுப்ப திட்டமிட்டுள்ளது. திமுகவின் எதிர்ப்புக் குரல் மட்டுமல்லாமல், தினகரனின் குரலும் ஓங்கி ஒலிக்கும் என்பதால், ஆட்சியாளர்களுக்கு இந்த சட்டப்பேரவை கூட்டம் பெரும் சவாலாகவே இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல், பழனிசாமி அணியில் ஸ்லீப்பர் செல் எம்.எல்.ஏக்கள் இருப்பதாக தொடர்ச்சியாக தினகரனும் அவரது ஆதரவாளர்களும் கூறிவருகின்றனர். ஆர்.கே.நகரில் தினகரன் பெற்ற வெற்றிக்கு பழனிசாமி அணியில் இருக்கும் சில எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களும் வாழ்த்து தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து தினகரன் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து ஓபிஎஸ்-இபிஎஸ் களையெடுத்து வருகின்றனர்.

மதில் மேல் பூனையாக இருக்கும் அதிமுக எம்.எல்.ஏக்கள் தினகரன் சென்றுவிடாமல் தடுக்க நேற்று எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, வேறொருவர் தலைமையில் ஆட்சி அமையும் என யாரும் ஆசைப்பட வேண்டாம். தினகரன் தலைமையில் ஆட்சி அமைவதை மத்திய பாஜக அரசு விரும்பவில்லை. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், ஆட்சி கலைக்கப்பட்டு தேர்தல் வரும். அப்போது மீண்டும் நீங்கள்(எம்.எல்.ஏக்கள்) வெற்றி பெறுவீர்களா என நினைத்து பாருங்கள். எனவே தற்போது இருப்பது போலவே ஒற்றுமையாக இருந்து ஆட்சியையும் கட்சியையும் காப்பாற்ற வேண்டும். ஆட்சியின் மீது திமுகவோ தினகரனோ குற்றச்சாட்டுகளை முன்வைத்தால், அமைச்சர்கள் பதில் கூறுவார்கள். நீங்கள் அமைதியாகவே இருங்கள் என பழனிசாமி பேசியுள்ளார்.

மேலும், தினகரனை சமாளிப்பது குறித்து பேசுகையில், தினகரனும் உங்களை போல ஒரு எம்.எல்.ஏ தான். எனவே, அவர் சட்டசபைக்குள் வரும்போது அசந்து மறந்து எழுந்து விடாதீர்கள் என பழனிசாமியும் பன்னீர்செல்வமும் அறிவுறுத்தியுள்ளனர்.
 

click me!