
வரும் 8 ஆம் தேதி சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் அவை முன்னவராக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டம், வரும், 8 ஆம் தேதி தொடங்குகிறது. அன்று, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், சட்டசபையில் உரையாற்றுகிறார். கூட்டத்தில்,சுயேச்சையாக வெற்றி பெற்ற தினகரனும்,பங்கேற்க உள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், 'டிபாசிட்'டை பறிகொடுத்த தி.மு.க.,வினர், சட்டசபையில், பல்வேறு பிரச்னைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளனர். மேலும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களை தங்கள் வசம் இழுத்து, ஆட்சியை கவிழ்க்க, தினகரனும் முயற்சித்து வருகிறார்.
இவற்றை முறியடிக்கவும், சட்டசபை கூட்டத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை தீர்மானிக்கவும், அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், இன்று காலை, 10:00 மணிக்கு, சென்னையில், ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.
இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் கலந்து கொண்டு ஆலோசனை செய்தனர். இதில் 100 க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.
நேற்று செய்தி டிபேட் லிஸ்டை வெளியிட்டது அதிமுக அரசு. மேலும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தினகரன் அரசு மீது குற்றச்சாட்டு எழுப்பினால் யாரும் வாய் திறக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது ஒபிஎஸ்க்கு வழங்கப்பட்ட அவை முன்னவர் பதவி செங்கோட்டையன் வகித்து வந்தார்.
இந்நிலையில், வரும் 8 ஆம் தேதி சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் அவை முன்னவராக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவை முன்னவர் பணியின் முக்கியத்துவம் என்னவென்றால் அரசு மற்றும் கட்சி குறித்து எதிர்கட்சிகள் குற்றச்சாட்டுகள் வைக்கும்போது அவை முன்னவர் பதில் தரலாம். மேலும் தீர்மானம் நிறைவேற்றும்போது அவை முன்னவர் முதலில் முன்மொழிவார்கள் பின்னர் அமைச்சர்கள் வழிமொழிவார்கள்.
அவை முன்னவர் பதவி என்பது சட்டப்பேரவையை பொறுத்தவரை மிக முக்கியமான பதவி என்பதால் பன்னீர்செல்வத்திற்கு மேலும் மேலும் முக்கியத்துவம் அதிகரித்து வருகின்றது என்றே கூறலாம்.