
சென்னை ஆர்.கே.நகர். நகர் தொகுதியில் வரும் 21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான இன்று பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கரு.நாகராஜன், ஜெ.வின் அண்ணன் மகள் தீபா, நடிகர் விஷால் ஆகியோர் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர்
ஆர்.கே.நகர் சட்ட சபை தொகுதியின் உறுப்பினராக இருந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மரணம் அடைந்ததால், அந்த தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிக்கையை தேர்தல் கமிஷன் கடந்த மாதம் 27-ந்தேதி வெளியிட்டது. அன்றே வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
முதல் நாளில் 4 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதையடுத்து ஒவ்வொரு நாளும் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்து வருகின்றனர். இதுவரை 5 நாட்கள் வேட்புமனு தாக்கல் நடைபெற்று இருக்கிறது. கடந்த 30-ந்தேதி வரை 9 பேர் மனு தாக்கல் செய்து இருந்தனர்.
கடந்த 1-ந்தேதி அ.தி. மு.க. வேட்பாளர் மது சூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், சுயேச்சையாக டி.டி.வி. தினகரன் உள்பட 24 பேர் மனுதாக்கல் செய்தனர். மொத்தம் 37 மனுக்கள் பெறப்பட்டு இருக்கின்றன. மதுசூதனன் கூடுதலாக 3 மனுக்களும், மருதுகணேஷ் கூடுதலாக ஒரு மனுவும் கொடுத்து இருக்கிறார்கள்.
வேட்பு மனுதாக்கல் செய்ய இன்று கடைசி நாள் ஆகும் என்பதால் பாஜக சார்பில் சார்பில் கரு.நாகராஜன், ஜெயலலிதாவின் அண்ணன் மகளும் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளருமான ஜெ.தீபா, நடிகர் விஷால் ஆகியோர் இன்று வேட்பு மனுதாக்கல் செய்ய இருக்கின்றனர். நடிகர் விஷால் இன்று மதியம் 12.30 மணிக்கு சென்னை தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.