
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்…82 வேட்பு மனுக்கள் ஏற்பு…45 மனுக்கள் நிராகரிப்பு…
ஜெயலலிதா அறைசையடுத்து சென்னை ஆர்.கே.நகரில் வரும் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக திமுக சார்பில் மருது கணேஷ், சசிகலா அணி டி.டி.வி.தினகரன், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன், தேமுதிக சார்பில் மதிவாணன்,பாஜக சார்பில் கங்கை அமரன், ஜெ.அண்ணன் மகள் தீபா உள்ளிட்ட 127 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்
இந்த நிலையில், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை சென்னை மாநகராட்சியின் தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீண் பி.நாயர், தேர்தல் பொதுப் பார்வையாளர் பிரவீண் பிரகாஷ், தேர்தல் காவல் பார்வையாளர் ஷிவ்குமார் வர்மா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இரவு வரை தொடர்ந்த, வேட்புமனுக்கள் பரிசீலனையின் முடிவில், டி.டி.வி.தின கரன், மதுசூதனன், மருது கணேஷ், மதிவாணன், கங்கை அமரன், லோகநாதன், ஜெ.தீபா உள்ளிட்ட 82 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கவில்லை என்று கூறி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, என் தேசம் என் உரிமை கட்சி, இந்து மக்கள் கட்சி, தமிழ்நாடு இளைஞர் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் உள்பட 45 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இந்நிலையில் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கு 27-ந் தேதி கடைசி நாள் ஆகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.