
வேட்புமனுத்தாக்கல் அங்கீகரிக்கப்பட்டதை தொடர்ந்து திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு ஆதரவாக தேர்தல் களத்தில் குதித்துள்ளார் முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12 தேதி நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனுதாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெற்றது.
இன்று நடைபெற்ற பரிசீலனையில் திமுக வேட்பாளரின் மனு ஏற்றுகொள்ளபட்டதால் ஆர்.கே.நகரில் தேர்தல் பிரச்சாரத்திற்கான ஏற்பாடுகளை அமர்களப்படுத்தி வருகின்றனர் திமுகவினர்.
மாதவரம் தொகுதி எம்.எம்.ஏவான சுதர்சனம் இதில் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உள்ளூர் பிரமுகரும் துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏவுமான சேகர் பாபு, மீனவர் பிரிவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.பி சாமி ஆகியோர் எப்படியாவது திமுகவை ஆர்.கே.நகர் தொகுதியில் பெரும்பான்மையாக வெற்றி அடைய செய்ய வேண்டும் என களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் திமுக செயல்தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மருதுகணேஷை ஆதரித்து ஒருபுறம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வரிசையில், பிரியாணி புகழ் தேர்தல் மன்னன் முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளருமான எ.வ வேலு தேர்தல் களத்தில் குதித்துள்ளார்.
அதனால் திமுக சார்பில் ஆர்.கே.நகர் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது என்றே சொல்லலாம்.