
தமிழத்தில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் தேர்தலை நடத்திவிட வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா உறுதியாக இருக்கிறது.
அதன் முதல் கட்டமாகவே இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகள் தமிழகத்தில் வலுவாக இருக்கும் வரை, தமிழகத்தில் வேறெந்த கட்சியும் காலூன்ற முடியாது என்பதை பாரதிய ஜனதா தெளிவாகவே உணர்ந்துள்ளது.
எனவே, ஜெயலலிதா இல்லாத நிலையில் அதிமுகவை உடைப்பது, அவ்வளவு கடினம் அல்ல. அதனால், தற்போது பிளவுபட்டுள்ள அதிமுக, ஒன்று சேராமல் பார்த்துக் கொண்டாலே போதும்.
கருணாநிதி செயலற்ற நிலையில் இருப்பதால், கனிமொழி, அழகிரி வகையறாக்களை கொண்டு திமுகவை பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று பா.ஜ.க எண்ணுகிறது.
எனவே, எடப்பாடி ஆட்சியை அப்படியே தொடர்ந்து விட்டால், மக்களுக்கு அது, பழகிப் போய்விடும் என்பதால், ஆட்சிக் கலைப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
குடியரசு தலைவர் தேர்தலில், அதிமுக ஆதரவு இல்லை என்றாலும், திமுக மற்றும் பன்னீர் அணி எம்.எல்.ஏ க்களின் ஆதரவு போதும் என்றே பா.ஜ.க நினைக்கிறது.
ஏதாவது ஒரு குழப்பத்தை உருவாக்கி, எடப்பாடி ஆட்சியை கலைத்து விட்டால், சசிகலா மீதுள்ள வெறுப்பால் மக்கள் அதை ஆதரிக்கவே செய்வார்கள் என்பதே அக்கட்சியின் கணக்காக உள்ளது.
எனவே, உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன், எடப்பாடி ஆட்சி கலைப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்கிறது பா.ஜ.க வட்டாரம்.
அதை தொடர்ந்து வரும் டிசம்பர் மாதத்திற்குள், தமிழத்தில் சட்டமன்ற தேர்தலை நடத்தலாம் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு தேர்தல் வரும் பட்சத்தில், சசிகலா அணியினர் தேர்தலை எதிர்கொள்வது கடினம். அப்போது, ஓ.பி.எஸ் துணையுடன் களமிறங்கலாம் என்பதே பா.ஜ.க வின் கணக்கு.
அப்படியும் இல்லையெனில் திமுகவுடன் கூட்டணி அமைக்கவும் பாரதிய ஜனதா தயாராக உள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.
விருச்சிக ராசியில் இருந்து சனி பகவான், வரும் டிசம்பர் மாதம் தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதற்குள் இங்கே பல பெயர்ச்சியை நாம் எதிர்பார்க்கலாம் என்கிறது ஜோதிட வட்டாரம்.