
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு மீண்டும் வலியுறுத்தி உள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கான தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத்தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரண்டு போர்க்கொடி உயர்த்தின. இது தொடர்பாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
ஆனால் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் இந்த தீர்மானத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதற்கிடையே தற்போதைய சூழலில் நீட்டில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கான மையங்களும் அறிவிக்கப்பட்டன.
இந்தச் சூழலில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை, விஜயபாஸ்கர் டெல்லியில் இன்று சந்தித்து பேசினார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், " நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் படி சட்ட அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தோம்.தமிழகம் இயற்றியுள்ள சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கும்படியும் வலியுறுத்தினோம். இதன் பின்னர் மத்திய அரசின் நிலையை ஒட்டி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்." இவ்வாறு விஜயபாஸ்கர் தெரிவித்தார்.