
வேட்புமனு தாக்கலின்போது, முக்கிய பிரமுகர்களுடனும் ஏராளமான ஆதரவாளர்களுடனும் வந்து தாக்கல் செய்வர். ஆனால், ஒருவர் குதிரையில் வந்து வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட சம்பவம் ஆர்.கே.நகரில் நடந்துள்ளது. கோவையைச் சேர்ந்த ஒருவர் ஆர்.கே.நகர் தேர்தல் அலுவலகத்துக்கு குதிரையில் சென்று இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து கடந்த 27 ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
திமுக சார்பில் மருது கணேசும், அதிமுக சார்பில் மதுசூதனனும், டிடிவி தினகரன் சுயேட்சை வேட்பாளராகவும் போட்டியிட உள்ளனர். இவர்கள் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்து விட்டனர். பாஜக சார்பில் கரு.நாகராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட கோவையைச் சேர்ந்த ஒருவர் குதிரையில் வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். கோவை சுந்தரபுரம், அஷ்டலட்சுமி நகரைச் சேர்நத்வர் நூர்முகமது. இவர் இன்று காலை தண்டையார்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்துக்கு திடீரென குதிரையில் வந்தார்.
குதிரையில் வந்த அவரை அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியோடு பார்த்தனர். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவதற்கு தான் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருப்பதாக கூறினார். இதையடுத்து தேர்தல் அலுவலகம் சென்ற நூர்முகம்மது, தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். நூர்முகம்மது தாக்கல் செய்த மனுவில், ஆர்.கே.நகர் வாக்காளர்கள் 10 பேர் முன்மொழிந்துள்ளனர்.