வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்..சட்டப்பேரவையில் விரைவில் தீர்மானம்.. முதல்வர் ஸ்டாலின் சரவெடி..!

By vinoth kumarFirst Published May 26, 2021, 10:47 AM IST
Highlights

மூன்று வேளாண்சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் டெல்லியில் தொடங்கி 6 மாதங்களாகியும் அதனை மத்திய அரசு கண்டு கொள்ளாதது கவலையளிக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மூன்று வேளாண்சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் டெல்லியில் தொடங்கி 6 மாதங்களாகியும் அதனை மத்திய அரசு கண்டு கொள்ளாதது கவலையளிக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் வட்டங்களையும் திரும்ப பெறக்கோரி டெல்லி எல்லையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி முதல் போராட்டம் தொடங்கி 6 மாதங்களாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மத்திய அரசு விவசாய சங்கங்களுடன் நடத்திய 11 கட்ட பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. 

டிராக்டர் பேரணி உள்ளிட்ட போராட்டங்களையும் நடத்திய விவசாயிகள் தங்கள் போராட்டம் 6 மாதத்தை எட்டியதை நினைவுப்படுத்தும் வகையில் இன்று நாடு தழுவிய கருப்பு தின போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர். 40 விவசாய சங்கங்கள் நடத்தும் இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 13 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில், வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்;- நாடாளுமன்ற நடைமுறைகளை புறக்கணித்து அவசரம் அவசரமாக கொண்டு வந்த, 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் டெல்லியில் தங்கள் போராட்டத்தை துவங்கி இன்றுடன் (மே 26) ஆறு மாத காலம் நிறைவு பெறுகிறது. இன்றளவும் போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை, உணர்வுகளை மதித்து 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதற்கு ஒன்றிய அரசு இதுவரை முன்வரவும் இல்லை, ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தி அதற்கான தீர்வு காண்பதற்கும் முயற்சிக்கவில்லை என்பது கவலையளிக்கிறது.

2021ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில், ‛இந்த மூன்று சட்டங்களையும் திரும்ப பெறத் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, இவற்றை ரத்து செய்திட ஒன்றிய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தப்படும்,' என தமிழக மக்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது. எனவே, 3 வேளாண் சட்டங்களையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்கள் தொடர்பாக திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் கூறியுள்ளார்.

click me!