அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலயா..? என்னை கூப்பிடுங்கள்.. அதிரடி காட்டும் ஆயிரம் விளக்கு எம்எல்ஏ.

By Ezhilarasan BabuFirst Published May 26, 2021, 9:39 AM IST
Highlights

அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் என்னை அழையுங்கள் என ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி எம்ஏல்ஏ மருத்துவர் எழிலன் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளார். இது அத்தொகுதி மக்கள் மத்தியில் உற்சாகத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.  

அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் என்னை அழையுங்கள் என ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி எம்ஏல்ஏ மருத்துவர் எழிலன் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளார். இது அத்தொகுதி மக்கள் மத்தியில் உற்சாகத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. 

திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்றது முதல், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் என மொத்த அரசும் மக்கள் பணியில் தீவிரம் காட்டி வருவதை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது. இந்நிலையில், நேற்று அதிகாரிகளுடன் பொதுமக்களின் இல்லங்களுக்கு சென்று குறைகளை கேட்ட சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் நாகநாதன். ஆயிரம் விளக்கு தொகுதியை முழுமையாக சுத்தம் செய்யும், "Clean Thousandlights" என்கிற திட்டத்தை முன்னெடுத்துள்ளார். 

அதையொட்டி ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட 112ஆவது வட்டம் - சுபேதார் கார்டன் குடிசை மாற்று வாரிய பகுதியை,  அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். அப்போது குப்பைகள் அகற்றம், கழிவுநீர் பாதைகளை சரி செய்தல், குடிநீர் குழாய்களை மாற்றித்தருதல் உள்ளிட்ட ஒவ்வொரு பணிகளையும் பட்டியலிட்டு, அவை நடைபெற வேண்டிய இடங்களையும் நேரடியாக சுட்டிக்காட்டினார். அப்பகுதி முழுமையாக சுத்தம் செய்யப்பட்ட பிறகு சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், இளைஞர்கள் குழுக்கள் அமைத்து அவற்றை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

அதைத்தொடர்ந்து தாஸ்புரம் பகுதிக்கு சென்ற அவர், அங்கிருந்த மக்களிடம் வீடு வீடாக சென்று குறைகளை கேட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளை அறிவுறுத்தினார். அப்போது பொதுக்கழிப்பிடங்களை பார்வையிட்டவர், அவற்றை நாம் பயன்படுத்தினால் எவ்வாறு பராமரிப்போமோ அந்த அளவுக்கு தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். குப்பைகள் அகற்றம் தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருந்தால் பொறுப்பான அதிகாரிகளிடம் உடனடியாக தெரியப்படுத்தவும், நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நேரடியாக தனக்கோ, தன்னுடைய உதவியாளருக்கோ தெரியப்படுத்தவும் மக்களிடம் கேட்டுக்கொண்டார். 

நியாய விலைக்கடையில் வழங்கப்படும் அரிசி குறித்து மக்கள் புகாரளித்ததை தொடர்ந்து அப்பகுதி நியாய விலைக்கடையை ஆய்வு செய்துவிட்டு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை உதவி ஆணையாளரை தொடர்புகொண்டு பிரச்சனையை சரி செய்ய அறிவுறுத்தினார். இந்நிகழ்வின் போது சென்னை பெருநகர மாநகராட்சி, சென்னை குடிநீர் மற்றும் வடிகால் வாரியம், மாநகராட்சியின் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையின் அதிகாரிகளும், ஆயிரம் விளக்கு மேற்கு பகுதி கழக செயலாளர் ஜெ.எஸ்.அகஸ்டின் பாபு, வட்ட கழக செயலாளர்கள் பரி, இதயத் பாஷா மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
 

click me!