Republic day : குடியரசு தின ஊர்தி விவகாரம்.. எல்லாத்துக்கும் காரணமே தமிழக அரசுதான்.. திருப்பி அடிக்கும் பாஜக!

Published : Jan 17, 2022, 08:15 PM IST
Republic day : குடியரசு தின ஊர்தி விவகாரம்.. எல்லாத்துக்கும் காரணமே தமிழக அரசுதான்.. திருப்பி அடிக்கும் பாஜக!

சுருக்கம்

 நமக்கும் தமிழக ஊர்தி இடம்பெறாதது வருத்தமளிக்கிறது. அதற்கான காரணம் குறித்து ஆராய்ந்தபோது 'தமிழக அரசே' முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியை தருகிறது.

திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில்கூட குடியரசு தின பேரணியில் தமிழக ஊர்திகள் இடம்பெறாது இருந்தது உண்டு என்று தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தின அணிவகுப்பில் இடம் பெறும் ஊர்தி அணிவகுப்பில் தமிழக ஊர்தி இடம்பெறவில்லை என்ற தகவல் வெளியானது. இதற்கு தமிழக முதல்வர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும் அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் தமிழக சுதந்திர  போராட்ட வீரர்கள் அடங்கிய ஊர்தி இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். நமக்கும் தமிழக ஊர்தி இடம்பெறாதது வருத்தமளிக்கிறது. அதற்கான காரணம் குறித்து ஆராய்ந்தபோது 'தமிழக அரசே' முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியை தருகிறது.

ஒவ்வொரு வருடமும் அனைத்து மாநிலங்களும் இந்தப் பேரணியில் கலந்து கொள்ள விண்ணப்பிக்கும், அதற்கான திட்டங்களை மேற்கொள்ளும். ஊர்திகளை வடிவமைக்கும். பாதுகாப்பு துறை அமைச்சகம், பல்வேறு மாநிலங்களின் ஊர்திகளில் சிறப்பான சிலவற்றை தேர்ந்தெடுத்து ஊர்வலத்தில் பங்கு பெற செய்யும். இதுதான் நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்று வரை உள்ள நடைமுறை. இதற்கு முன்னர் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில்கூட குடியரசு தின பேரணியில் தமிழக ஊர்திகள் இடம்பெறாது இருந்தது உண்டு. பாதுகாப்பு துறை அமைச்சகமானது, பல்வேறு துறைகளின் நிபுணர்களை கொண்ட ஒரு குழுவை அமைத்து குடியரசு தின அணிவகுப்பில் கலந்துகொள்ளும் ஊர்திகளை தேர்ந்தெடுக்கும். இந்த குழுவில், கலை, கலாச்சாரம், ஓவியம், சிற்பம், இசை, கட்டிடக்கலை, நடனக்கலை ஆகிய துறைகளின் நிபுணர்கள் இடம்பெறுவார்கள். இந்த குழு பல முறை சந்தித்து அணிவகுப்பில் இடம்பெறும் சிறந்த ஊர்திகளை தேர்வு செய்வார்கள்.

இக்குழுவானது முதலில் வடிவமைப்பை ஆய்வு செய்து அதில் திருத்தங்களை செய்து மாற்றங்கள் தேவையெனில் ஆலோசிக்கப்படும். அந்த வடிவமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டால், அம்மாநில அதிகாரிகள் முப்பரிமாணத்தில் தங்களின் மாதிரியை விளக்குவார்கள். மீண்டும் அந்த குழு ஆய்வு செய்து இறுதி தேர்வுக்கு முன்னெடுத்து செல்லும். அழகான ஒளி தோற்றம், மக்கள் மனதில் பதிவது போன்ற காட்சியமைப்பு, வடிவமைப்பின் எண்ண ஓட்டம், அதனுடன் உள்ள இசை ஆகிய பல்வேறு காரணிகளோடு, இவைகளின் முழு விவரங்களையும் விரிவாக விளக்கமளித்த பின் இறுதி தேர்வு செய்யப்படும். அதிகாரபூர்வ பிரதிநிதிகள் மட்டுமே இந்த குழுவுடன் இணைந்து செயல்பட முடியும். ஆக, எந்த மாநிலங்கள் சிறப்பான தயாரிப்பை வடிவமைத்து முன்வைத்ததோ, அந்த மாநிலங்கள் அந்த வருட அணிவகுப்பில் தேர்வு பெற்று இடம்பெறும் என்பதே நடைமுறை.

 

அதனடிப்படையில் இந்த வருடம் தமிழகம் சரியான முறையில் நம் மாநில ஊர்திகளை காட்சிப்படுத்த தவறிவிட்டது என்பதே கண்கூடு. ஆனால், இந்த நடைமுறை தெரியாமல் வழக்கம் போல் மத்திய அரசு வஞ்சித்து விட்டது என்று மீண்டும் மீண்டும் மலிவு அரசியலை செய்வது அழகல்ல. தமிழக முதல்வர் இந்த நடைமுறையை மறந்து விட்டாரா? அல்லது அவருக்கு அதிகாரிகள் இதை தெரியப்படுத்தாமல் மறைத்து விட்டார்களா? எது எப்படி இருந்தாலும், இதையே ஒரு பாடமாக கொண்டு அடுத்த வருடம் சிறப்பான வடிவமைப்பை கொண்டு நமது மாநில ஊர்தியை  பேரணியில் இடம் பெற வைக்க வேண்டியது தமிழக அரசு மற்றும் அதிகாரிகளின் கடமை. அதை விடுத்தது யாரோ சொன்ன ஆதாரபூர்வமற்ற கருத்துகளை பொறுப்புள்ள சிலர் பொது வெளியில் பொறுப்பற்ற முறையில் வெளியிடுவது தவிர்க்கப்படவேண்டும்.” என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!
பாஜகவின் வாக்கு திருட்டு அட்டூழியம்..! ஆர்எஸ்எஸின் அத்துமீறல்..! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச அட்டாக்..!