Amit Shah: நீட் தேர்வு விலக்கு... அமித் ஷாவிடம் பேசியது என்ன? போட்டு உடைத்த டி.ஆர். பாலு

By manimegalai aFirst Published Jan 17, 2022, 7:59 PM IST
Highlights

நீட் தேர்வு விலக்கு தொடர்பான விவகாரத்தில் எடுக்கப்படும் முடிவை முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவிப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி இருக்கிறார்.

டெல்லி: நீட் தேர்வு விலக்கு தொடர்பான விவகாரத்தில் எடுக்கப்படும் முடிவை முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவிப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி இருக்கிறார்.

எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் நுழைய தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வு நீட். இந்த தேர்வை எதிர்த்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. நீட்டில் இருந்து விலக்கு வேண்டும் என்பது தமிழக அரசின் நிலைப்பாடு.

அதற்காக விலக்கு பெற, தமிழக சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னர் அது ஆளுநர் ஒப்புதலுக்கு  அனுப்பி வைக்கப்பட்டது. மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை. முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று வலியுறுத்தியும், மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பப்படவே இல்லை.

நிலைமை இப்படி இருக்க… தமிழகத்தில் நீட் தேர்வு விலக்கு கோரி, எம்பி டிஆர் பாலு தலைமையில் அனைத்து கட்சி எம்பிக்கள் குழு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க முயன்றனர். ஆனால் பல முறை சந்திக்க முயன்றும் அப்பாயின்ட்மென்ட் கேன்சல் செய்யப்பட்டது.

இது பெரும் சர்ச்சையாகவும், தமிழக எம்பிக்களை மத்திய அரசு அவமானப்படுத்திவிட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, தமிழக எம்பிக்கள் குழுவை இன்று சந்திக்க இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதன்படியே உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழக எம்பிக்கள் குழுவை இன்று சந்தித்தார். அவரிடம் எம்பிக்கள் குழுவானது, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரி மனு ஒன்றை அளித்தது.

இந்த சந்திப்பின் போது, உள்துறை அமைச்சரிடம் என்ன பேசினோம் என்பதை செய்தியாளர்கள் சந்திப்பில் விரிவாக விளக்கி இருக்கிறார் டி.ஆர். பாலு. அவர் கூறி இருப்பதாவது:

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நீட் தேர்வு விலக்கு தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி தேர்வில் இருந்து விலக்கு கோரும் மனுவை அளித்து இருக்கிறோம்.

2007ம் ஆண்டு தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து ஜனாதிபதி விலக்கு அளித்துள்ளதை சுட்டிக்காட்டி விலக்கு தர வேண்டும் என்று வலியுறுத்தினோம். அவரும் இது குறித்து கல்வி, சுகாதார அமைச்சர்களுடன் கலந்து பேசிவிட்டு முதல்வர் ஸ்டாலினிடம் உடனடியாக முடிவை தெரிவிப்பதாக கூறி இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார் டி.ஆர். பாலு.

பின்னர் செய்தியாளர்கள் கேள்விகள் எழுப்ப டிஆர் பாலு அளித்த பதில்கள் வேறு ரகம். அவர் கூறி இருப்பதாவது: அமித் ஷா ஏன் எங்களை சந்திக்கமுடியவில்லை என்று போன் பண்ணி சொல்லி இருக்கிறார். எல்லாவற்றையும் இங்கே விளக்கி கூற முடியாது.

சில விஷயங்கள் தான் கூற முடியும். சிலவற்றை கூற முடியாது. நான் என்ன சொல்கிறேன் என்றால் எந்த உள்நோக்கமும் இல்லாமல் சாதாரணமாக இருக்கிற வேலைப்பளு காரணமாக தான் எங்களை சந்திக்க முடியவில்லை. இந்த சந்திப்பு தள்ளி போடப்பட்டு இருக்கிறது. 

சந்திக்க மறுத்ததில் எவ்வித உள்நோக்கமும் இல்லை. நான் எதையும் மறைக்க கூடிய ஆள் இல்லை. நாங்களும் சரி, இங்கு வந்திருக்கிற தோழமை இயக்கங்களும் சரி யாரும் எதையும் மறைப்பது என்பது கிடையாது என்று கூறினார்.

அமித் ஷாவுடனான சந்திப்பு குறித்து டி.ஆர். பாலு இப்படி கூறினாலும், தமிழக அரசினுடைய மசோதாவை ஏற்பது குறித்து எந்த உறுதியையும் அமித் ஷா தரவில்லை என்று தான் தகவல்கள் வெளியாகி உள்ளன.

click me!